தேவதேவனும் ஜென் கவிதைகளும்



" பேர்யாழ் " என்ற கவிதைத் தொகுப்பு குளிர் காலத்தில்​ கனன்று கொண்டிருக்கும் தாயின் மார்பினில்  உறங்கும் பச்சிளங்குழந்தை போல ஒரு கதகதப்பை தந்தது. இது குளிர் காலத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டான உவமை மட்டுமல்ல. தேவதேவன் கவிதைகள் என்னை குழந்தை போல கள்ளமற்ற மகிழ்ச்சி அடைய செய்தது.

தேவதேவன் கவிதைகளை சாதாரணமான செடி, கொடி, மரங்கள் பற்றிய அழகியல் கவிதை என்று சுருக்கி விட முடியாது. புத்தன்/ லாவேட்சு/ ஓஷோ கவிதை எழுதியது போல ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஞானச்சிதறல்கள் பட்டுத் தெறித்து உன்மத்தம் அடைகிறது. ஒவ்வொரு கவிதையும் பேரானந்தம். தமிழில் ஜென் கவிதைகள் ஒன்று உண்டெனில் அதில் இந்த தொகுப்பிற்கு முக்கியமான பங்கு வகிக்கும் என நம்புகிறேன். 



புரட்சி என்பது அகவயமானது என நம்புகிறேன். செயலின் ஊற்றுக்கண்ணான சிந்தனையை பாதிப்பதே எழுத்தின் முக்கியமான தொழிலாக நம்புகிறேன். இங்கு புரட்சியை புறவயமானது என்று பலர் நினைக்கக்கூடும். அது பகுத்தறிவோடு நின்று விடும். அதற்கு மேல் பயணிக்க வேண்டும் என்றால் நாம் உட்புறமாக திரும்பிச் செல்ல வேண்டும். தேவதேவன் கவிதைகள் அனைத்தும் அவரது இதயத்திலிருந்து புறப்படும் அன்பெனும் தோட்டாக்கள் நேரடியாக நமது இதயத்தை நோக்கி வருவதை உணரலாம். அவற்றை புரிந்து கொள்ள உங்களது பகுத்தறிவை உபயோகிக்காதீர்கள். அது போதாது.

"வான் அளாவும் மரங்களும்
வான மா மலைகளும் மேகங்களும்
புல்லும் புழுவும்
எத்துணை பேராளுமைகளாய் ஒளிர்கின்றன.
அச்சமறியாது
அவை இப்பேரண்டம் நோக்கிப்
பாட அறிந்ததுவால்!
இப்பேரண்டமே அவற்றின் அகமும் புறமும்
அன்பும் ஆதரவுமாகியதுவால்! ".


இந்த ஒற்றை கவிதை போதும் இத்தொகுப்பில் தேவதேவன் கவிதைகளை புரிந்து கொள்ள.

ஒரறிவு என்று சொல்லும் புல் தான் சிறியவனவாக இருக்கிறேன் என்று புலம்புவதில்லை. உயர்ந்த மலைகளும் நான் உயர்ந்திருக்கிறேன் என்று கர்வம் கொள்வதில்லை. தனக்கு யாருமில்லை என்று அழுவதில்லை. அச்சப்படுவதுமில்லை. தானும் இந்த பிரபஞ்சத்தில் ஒர் அங்கமென நினைக்கும் உயிர்களே அவை. மேலும் இந்த பிரபஞ்சமே தனக்கு சொந்தமானதாக நினைக்கின்றன. அதனால் அது குதுகலிக்கின்றன. இந்த வாழ்வை கொண்டாடித் தீர்க்கின்றன. ஆனால் இந்த மனிதன் அதைப் புரிந்து கொள்ளாமலே நான் மட்டுமே இந்த பிரபஞ்சத்தின் தனிமையில் இருப்பதாக ஒவ்வொரு நொடியும் நொந்துக் கொள்கிறான். அதற்காகவே​தான் 132 கவிதைகளில் 100கவிதைகளிலாவது சில வரிகளை டெம்ப்ளேட்டாக சேர்த்து உள்ளார். அவை:

" அன்பே
நம் வீட்டு மூலையிலே
அமைதியான இரவின்
இன்ப நினைவுகளைப்​ போலும்
அழிக்க முடியாத அமைதியின்
ஆழமானதோர் புத்தொளிபோலும்
வந்தமர்திருக்கும்
அந்தப்​ பேர்யாழை உன் மடியெடுத்து மீட்டு
உலகில் மறைந்து கிடக்கும் பேரிசையை
அது மீட்கட்டும்... " 




ஸென்னில் சொல்வது போல live the moment தான் தேவதேவன் கவிதைகள். அதுவே தியானம். வாழ்க்கை கொண்டாடுவதற்கு. சோகம் நிறைந்த மனித மனங்களுக்கு இந்த பேர்யாழ் எனும் இன்பத்தை உருவகப்படுத்தி அதை மீட்டு அழியாத அமைதியை, கொண்டாட்டத்தை தீரம் இசையை கேட்கச் சொல்கிறார். மேலும் ஸென்னின் முக்கிய நோக்கம் தனித்தன்மையை வெளிக்கொணர்த்தல் ஆகும். எல்லா ஜீவராசிகளும்  தங்களின் தனித்தன்மையை இழந்து விடாமல் இருக்க வேண்டும். அதுதான் ஒவ்வொருவரின் வாழ்கைக்கும் அர்த்தம் கொடுக்கக்கூடியது. புத்தொளி பொங்கச் செய்வதும் அதுவே. அதைப்பற்றி ஒரு கவிதை

தூத்துக்குடி
தூத்துக்குடியிலேயே இருக்கிறது
சென்னை
சென்னையிலேயே இருக்கிறது
பெங்களூர்
பெங்களூரிலேயே இருக்கிறது
ஆகவேதான் அது
காதல் மிகுந்திருக்கிறது.

ஆக உற்று நோக்கினால், தேவதேவனின் இந்த தொகுப்பில் உள்ள முக்கால்வாசி கவிதைகள் ஜென் கவிதைகள் தானென நினைக்கிறேன். தேவதேவனுக்கு லவ் யூ சொல்லி​ முத்தம் கொடுக்க வேண்டும் போல இருக்கிறது. எனது அருகாமையில் இருக்கும் இந்த கீபோர்ட்டுக்கு தருகிறேன். வண்ணத்துப்பூச்சி விளைவு விதியின்படி அது தேவதேவன் கன்னத்தில் எனது இதழின் குளிர்ச்சியை எப்படியாவது தீண்டி விடும் என்ற நம்பிக்கையில்.

Comments

Popular posts from this blog

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :