ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்




    “ தன்னைத் தானே அவதானிக்கும்
      விழிப்பு நிலை தான் ஆத்மார்த்தத்தின்
      முதலும் முடிவுமான செயல் வழி”.

              ~ ஜே.கிருஷ்ணமூர்த்தி

எனக்கு எதிர் வீட்டில் ஐந்து குழந்தைகள். அவர்கள் பெற்றோர் காலையில் 8மணிக்கு வேலைக்கு சென்று மாலை 6 மணிக்குதான் வருவது வழக்கம். சிலர் பள்ளி செல்லும் சிறுவர்கள். சிலர் பால்வாடி செல்லும் சிறுமிகள். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் வெறுமனே இவர்களை அவதானிப்பது மட்டுமே எனது வேலை. ஒரு ரூபாய்க்கு பிரயோஜனம் அற்ற வேலையல்லவா. இந்த அவதானிப்பு சில ஆண்டுகள் என்பது எனக்கே அதிர்ச்சி தரும் செயல்பாடு தான். இருந்தும் இப்போதும் அவர்களை அவதானிக்க அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள ஏராளமாக இருப்பதாக தோன்றுகிறது. என்னடா இவன் குழந்தைகளை ரொமான்டிசைஸ் செய்கிறானே என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள். நான் புதுமைப்பித்தனின் “அடச்சீ இந்த சனியன்களே..”இந்த கவிதை போலத்தான் பழகுவேன். பொதுவாகவே இது எதிர் அழகியல் முயற்சி. ஒரு அதட்டலுடனே குழந்தைகளுடன் பழகுவேன். அவர்களின் முகபாவனைகளில் இருந்து மொழி வரைக்கும் கவனிப்பதே என் பிரதானமான தொழிலாக இருக்கிறது.

ஜெயமோகன் தனது மகள் சைதன்யா வை பற்றிய தொடர் அவதானிப்புகளாலும் உரையாடல்களாலும் எழுதிய புத்தகம் தான் இது. இதை நீண்ட சிறுகதை, குறு நாவல் என்று எந்த சட்டகத்தில் அடைப்பதென்று தெரியாது. ஆனால் இது இலக்கியம் ஆவதற்கான தகுதிகள் இருக்கிறது என்பது வெளிப்படை. 



ஒரு மொழியின் புதிய சாத்தியங்கள் கவிஞர்களாலும் குழந்தைகளாலும்தான் சாத்தியமென ஜெயமோகன் பலமுறை சொல்லிக்கொண்டே வருகிறார். கவிஞர்கள் கூட முதிர்ச்சி அடைந்த பிறகு எழுதும் கவிதைகள் பெரும்பாலும் குழந்தைகளைப் பற்றியே உள்ளன. முகுந்த் நாகராஜன் கவிதை ஒன்று:


“இப்போதுதான் கிடைத்தது ஜன்னல் சீட்
உடனே இறங்க சொல்கிறாள் அம்மா
வீடு இங்கேதான் இருக்கிறதாம்
இதெல்லாம் ஒரு காரணமா”.

குழந்தைகளை அவதானிப்பது என்பது நம்மை நாமே தூய்மையின் ஆதியில் சென்று அவதானிப்பதற்கு சமமான செயல். மொழிகளை ரசிப்பவன் எவனும் குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது ஒருவகையில் பெரிய இழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். இது பொதுவாக மனித குலத்திற்கே உரியது என்பது சாலப்பொருத்தம்.

பொதுவாகவே ஜெயமோகன் அகங்காரமான ஆளென்று எல்லோரும் சொல்வதுண்டு. இதை யாராவது அவரிடம் சொன்னால் அதை அவரே கூட மறுப்பதில்லை. ஆனால் என்னைப் பொருத்தவரை ஜெ.மோ. அப்படி இல்லை. அவர் சுர்ரென்ற இறுக்கமான முகத்தை உடையவரென நினைக்கக்கூடும். அதுவும் பொய்யாகவே இருக்கும். நான் அவரை சந்தித்தது இல்லை என்றாலும் இதை உறுதியுடன் சொல்லுவேன். அவரைப் போன்று அங்கதமான ( satire) மொழியை உபயோகிக்கும் எழுத்தாளர்கள் குறைவாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்தின் மெய்ஞானம் அடையும் புள்ளியான ஒரு பாராகிராப்பை தருகிறேன். அது ஒன்றே மெற்சொன்ன எல்லாவற்றுக்கும் ஆதார புள்ளியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜெ.சைதன்யாவின் தந்தையராகிய இவர்- இவருக்குத் தானே ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர் என்றெல்லாம் எண்ணம் இருந்திருக்கிறது, சில நூல்களும் அந்த பாவனையில் எழுதியிருக்கிறார். மனிதர்களின் அகங்காரத்துக்கு எல்லை உண்டா என்ன? ஒருநாள் இரவு பேருந்தில் குடும்பத்துடன் வெளியூருக்கு போகும் போது ஓர் ஆழ்ந்த தரிசனத்தை காணும் பேறு பெற்று மெய்யடியராக மாறினார் என்று அவரே குறிப்பிடுகிறார். பேருந்தில் கனத்த அட்டையை மடி மீது விரித்து அதன்மீது சிறு மெத்தை போட்டு அதில் ஜெ. சைதன்யாவை படுக்க வைப்பது இவர் வழக்கம். திடுமென இவர் விழித்துக் கொண்ட போது எதிரே வந்த லாரியின் முகவிளக்கின் ஒளியில் நெருப்பு வண்ணத்தில் சுடர்விட்ட ஜெ. சைதன்யா முகத்தை பார்த்தார். மனம் பொங்கிய கனத்தில் தன் பெரும் குலத்தின் பல்லாயிரம் வருடத்து அன்னைத் தெய்வங்கள் எல்லாம் உக்கிரமும், அருளும், அன்னையையும் கன்னிமையுமாக தன்முன் விரிந்து செல்வதை அறிந்தார். பின்பு தனது நடுங்கும் விரல்களால் ஜெ. சைதன்யா வின் மண்ணறியா மென் பாதங்களை தொட்டபோது அவரது ஆழத்தில் ஆயிரம் ஞானநூல்களாலும், பல்லாயிரம் அறிவுரைகளாலும் முட்டி மோதியும் பட்டுத்திரைச் சீலைகள் போல விலகி வழி விட்டன”.

பொதுவாகவே ஒவ்வொருவரின் பார்வைக் கோணமும் வெவ்வாறனதே. ஜெ.சைதன்யாவின் வளர் பருவத்தை என்னால் எனது மனக்கண்ணால் பார்க்க முடிந்தது. சாதாரணமான ஒருத்தரின் குழந்தைகள் பற்றிய ரொமான்டிசைஸ் பார்வைக்கும் ஒரு எழுத்தாளனின் பரந்துபட்ட பார்வைக்கும் உள்ள வேறுபாடு இதில் தெரியும்.  



ஜெயமோகன் மீதான மிக முக்கியமான ஒரு அவதூறாகளில் முதன்மையானதாக இருப்பது அவர் ஒரு இந்துத்துவா. பா.ஜா.காவின் கைக்கூலி. காவி வெறியன் என்பது போல பேஸ்புக்கின் புராதான அனைத்து சொல்லாட்சிகளையும் இங்கு போட்டுக் கொள்ளலாம். அவர்களெல்லாம் ஜெயமோகனை வாசிக்காத குரூடர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.  இதில் கூட அதை தவிடு பொடியாக்கும் பல பக்கங்கள் வருகின்றன. ஆனால் வானத்தை பார்த்து கொண்டு விமர்சனம் என்ற பெயரில் வசைகளை மட்டுமே தங்களது பீய் போல வெளித்தள்ளிக் கொண்டிருக்கும் கூட்டத்திற்கு இந்த பக்கங்கள் எல்லாம் படித்தாலும் புரியுமா என்பது கேள்விக்குறியே.

குழந்தைகளின் சிதைந்த மொழியில் இருக்கும் அழகியலை அவர்களது தூய இதயத்திலிருந்து மலரும் சிந்தனைகளை விடவா இலக்கியத்தில் பேரூண்மைகள் இருந்து விடப் போகிறது.

சொல் என்பது ஒரு கருவியே. பூட்டை திறக்க சாவி இல்லாத போது கையில் உள்ள கம்பியையே வளைத்துப் பயன்படுத்துவது போலத்தான் சொற்களும். கதவு என்ற சொல் கிடைக்காத போது 'வீடுமூடி’ என ஜெ. சைதன்யா சொல்லிதாக குறிப்பிடுகிறார். இப்படி நிறைய வார்த்தைகள். எழுத்தாளன் புதிய வார்த்தைகளை உருவாக்க எவ்வளவு பாடுபட வேண்டும் என்பது மொழிக்குள் இயக்குபவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

ஒருமுறை எம்.கே. மணி (திரைக்கதை எழுத்தாளர்) அவரது மகன் சொல்லும் கதைகளில் இருக்கும் திரைக்கதையை வியந்ததாக எழுதியிருந்தார். போகன் ஷங்கர் கூட அவரது நிறைய உச்சமான கவிதைகளை தனது மகள் ஹரிணி வாயிலாகவே பெற்றிருக்கிறார் என்பதை அறியலாம். இதனால் அறிய வரும் நீதி எல்லாம் வாசகர்களே தீர்மானித்து கொள்ள வேண்டியது தான்.

இந்த புத்தகத்தின் குறை என்றால் ஒன்றை குவியப்படுத்தும்போது இன்னொன்று புறக்கணிக்கப்படுவது இயல்பானதே. அப்படி இதில் ஜெ.வும் அவரது மகளும் பிரதானமாக இருக்கிறார்கள். அவரது மனைவி கேமியோவாக அடிக்கடி வந்து செல்கிறார். அவரது பார்வையை மேலோட்டமாகவே பதிவு செய்கிறார். ஒன்று உச்சமாக இருக்கும் போது மற்றொன்று இப்படி இருந்தால் தான் சமநிலை அடையுமா என்ன. ஆனால் அவருக்கும் அவரது மனைவிக்குமேயான உரையாடல்கள் அனைத்தும் விழுந்து சிரிக்க கூடியதாகவே இருக்கும். முக்கியமாக இன்னொன்று ஜெ.சைதன்யா வளர்ந்து விட்டார். இதை அவர் இரண்டாவது பாகம் எழுதி அதை தொகுத்து ஒரே புத்தகமாக வெளிவந்தால் நன்றாக இருக்கும். ஈடிபஸ் கதையெல்லாம் பார்த்தாயிற்று. இந்த கேள்வியை கூட அவரது குடும்பத்தினரும் தமிழகமும் அவரது வாசகர்களும் முகச்சுழிப்புடனே எதிர்கொள்வர் என்பது தெரியும். ஆனால் தன்னைத் தானே அவதானிக்கும் செயல்தானே ஆத்மார்தத்தின் முதலும் முடிவுமான செயல்.

பொதுவாகவே இலக்கியம் படிப்பவன் முசுடாக இருப்பானென்றும் அதுவும் ஜெ. போன்றவர்களது குடும்பம் மனநிலை பாதிக்கப்பட்ட குடும்பமாக இருக்குமா என்றெல்லாம் எண்ணம் உடையவர்கள் இதை படித்தால் அதையெல்லாம் தகர்க்க கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருப்பதை உணரலாம். மேலும் கம்யூனிசம், இருத்தலியல், சர்வைவல், நாத்திகம், ஆத்திகம் போன்ற பல தலைப்புகளில் சைதன்யாவின் சிந்தனை என்று அங்கதமாகவும் அறச்சீற்றத்துடனும் முன்வைக்கும் கேள்வி பதில்கள் எல்லாமே இந்த புத்தகத்தின் மெய்ஞானம் அடையும் புள்ளியாக எடுத்துக் கொள்ளலாம்.

சரி, இவ்வளவும் சொல்லியதால் ஒரு ஜென்டில்மேன் பாவனை எனக்கே உறுத்துகிறது. ஜெ.சைதன்யாவின் தற்போதைய புகைப்படங்களை கூகிளில் தேடியும் கிடைக்கவில்லை. அபுனைவு என்பதால் நாம் கற்பனை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு செல்ஃபி புகைப்படம் கூட கிடைக்கவில்லை என்பது ஒரு ஜெ.சைதன்யாவின் ரசிகனாக மிகுந்த மன உளைச்சலை தருகிறது. 😉

வெளியீடு- வம்சி புக்ஸ். www.vamsibooks.com
விலை - ₹ 50. 

Comments

  1. J.Chaidhanya's Photo
    https://tamil.wiki/wiki/File:Chaidhanya2.jpg

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?