ஆன்மாக்களின் ஜேப்படி- கானகன்:



2016 ஆம் ஆண்டு யுவபுரஸ்கர் விருது வென்ற, லஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் நாவல் பற்றிய எனது வாசிப்பு அனுபவம். இது ஒரு புலி வேட்டையில் தொடங்கி புலி அவனை வேட்டையாடுவதில் முடிவடைகிறது. தங்கப்பன் என்பவன் அந்த வேட்டைக்காரன். அவனுக்கு மூன்று மனைவிகள். மாரி, சகாயராணி, செல்லாயி. கடைசி மனைவியின் மகன் வாசி. வாசியின் தந்தை சடையன். தங்கப்பனின் நண்பன் அன்சாரி. இவர்களுடன் காடுகளும் புலிகளும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள். இதில் புலியின் நீதியுணர்ச்சியும் தகப்பன் மீது மகன் கொண்டிருக்கும் வெறுப்பும் தான் முக்கியம். அத்துடன் இந்நாவலில் ஆன்மாக்கள் பற்றி நிறையவே வருகிறது. அந்த ஆன்மாவை ஆராயும் ஒரு முயற்சி. 

 கதை நடக்கும் காலகட்டம் எம்ஜிஆர்  காலகட்டம். சரி. அந்தக் காலத்தில் மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி இருந்ததா ? பள்ளிக் கூடமும் இல்லை. உலகத்தையே துறந்து தனித்து வாழும் மக்களென எழுத்தாளரே தெளிவாக குறிப்பிடுகிறார். இந்த நிலையில் புலி வேட்டையின் போது ஃப்ளாஷ் லைட் உபயோகித்தாக எழுதுகிறார். இந்த கருவிகள் இந்த காலகட்டத்தில் இருந்ததா என்பது எல்லாம் தகவல்கள் குறைவு. எழுதப்படிக்காத சினிமா கூட பார்க்காத ஒருவன் " ஆன்மா, ஆத்மா, பாஸ்பரஸ் உருண்டை" என்ற வார்த்தைகளை எப்படி உபயோகிப்பான். ஆன்மா ஆத்மா அதெல்லாம் இலக்கியம் படிப்பவன் தானே சரளமாக பேசுவான். பாஸ்பரஸ் என்பது வேதியியல் பெயர். விட்டால் பாஸ்பரஸின் வேதியியல் மூலக்கூற்று வாய்ப்பாடு கூட கதாபாத்திரங்கள் பேசும். எழுத்தாளனுக்கு தெரிந்த எல்லா தகவல்களையும் படிக்காத பழங்குடி கதாபாத்திரம் பேசுவது முற்றிலும் சகிக்க முடியாத புனைவு.

கதாபாத்திரங்கள் பேசும் மொழி கூட எண்பதுகளில் பேசியது போல இல்லை. சாதாரணமான பேஸ்புக்கில் மதுரைக்காரர்கள் உபயோகிக்கும் மொழியே உள்ளது. ஆபாச வார்த்தைகளை வைக்க வேண்டிய இடங்கள் கூட கைவரவில்லை. தேவையில்லாமல் யார் வேண்டுமானாலும் பேசுவது முற்றிலும் போலியானது. பூசணி என்று ஒரு கதாபாத்திரம் வருகிறது. நல்ல மரியாதையான ஓர் ஆள். பொறுமையான ஆளும் கூட. ஆனால் திடீரென அந்த கதாபாத்திரம், " அந்த மயிறு எல்லாம் எனக்கு தெரியும்.  பொச்சை சாத்தினு சொல்லு" என பேசுவது முற்றிலும் முரணானது. கதாபாத்திர சிதைவுகள் அதிகமாக இருந்தது. அது கதாபாத்திர மாறுதல் ஆக இல்லை. பெரிய பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அமைதியாக பேசிவிட்டு சல்லித்தனமான ஒரு விஷயத்தில் இப்படி பேசுமா? இது எழுத்தாளரின் முகநூல் பதிவு போலவே இருந்தது.




கதாபாத்திர வார்ப்புரு அம்சங்களில் இயற்கையான உயிர்துடிப்பும் மனவளர்ச்சியும் இல்லை. யாருக்குமே ஒரு வரைவு இல்லை. கதாபாபாத்திர வளர்ச்சிகளில் திடீர் திருப்பங்கள். மேஜிக் ஷோவா இது? ஒரு பாத்திரம் வேறொன்றாக மாறுவதற்கு எவ்வளவு நுட்பமாக உளவியல் மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை ஆராய்வதில் தானே எழுத்தாளனின் ஆளுமை மிளிர்கிறது. இங்கு அதெல்லாம் எதுவுமே இல்லை. குறிப்பாக இரண்டாவது மனைவி சகாயராணி மாற்றம். தங்கப்பனின் நண்பன் மாற்றமும். அந்த புணர்சிகளும் திடீர் திருப்பங்கள். 

நாவலில் ஒரு ஜமின்தார் கதாபாத்திரம் வருகிறது. வேட்டை வெறுமனே போதை. வீம்பிற்காக ஒரு கருவுற்ற மானை சுட்டு திடீர் திருப்பமாக யோக்கியன் ஆகிவிடுகிறார். இது வெறும் தகவலாக வந்தது. உணரவைக்க தவறிவிட்டார். சற்று செயற்கையாக இருந்தாலும் இந்த கதாபாத்திரம் மற்றவைகளை விட பரவாயில்லை. பிறகு சடையன் என்றொரு கதாபாத்திரம். அதாவது வாசியின் தந்தை. ஒரு கோமாளி. பித்து பிடித்த கதாபாத்திரம். தத்துவம் நன்றாக பேசக் கூடிய பாத்திரம். ஏன் நாவலாசிரியர்கள் தத்துவம் பேசுவதற்காக ஒரு கோமாளியின் கதாபாத்திரத்தையும் சினிமாக்காரர்கள் ஒரு குடிகாரனையும் உபயோகிப்பது?. இன்னும் எத்தனை வருடங்களுக்கு இந்த குலத் தொழில் சம்பிராதயத்தை சிருஷ்டி கர்தாக்கள் பின்பற்றுவார்கள் எனத் தெரியவில்லை. 

நாவலின் வடிவம் நான்கு பெரும்பொழுதுகளை வைத்து எழுதியிருப்பது வெறுமனே ஒரு ஜிகினா தான். பார்க்க வசீகரிக்கும் அவ்வளவுதான். கிம்கிடுக்கின் Spring summer fall winter படத்தலைப்பு நியாபகம் வருவது எதேச்சையாகதான் என்பதை உறுதியளிக்கிறேன்.

தங்கப்பனை வாசி தந்தையாகவே கருதவில்லை. ஒருமுறை வியாபாரம் நிமித்தமாக முதன்முறை வெளியூர் பயணத்தின் போது வாசி தங்கப்பனிடம் தந்தை இல்லை என்று கோபித்துக் கொள்வான். பின்னர் தங்கப்பன் வாசியை பற்றி கவலையில்லாமல் தனது குடிலுக்கு செல்வான். இது ஆண்களுக்கு உரிய உளவியல். இதே இடத்தில் பெண்கள் இருந்தால் ஒரு ஒப்பாரியே கூட நடந்திருக்கலாம். இந்த இடம் அருமை. மாரியும் தங்கப்பனும் புணர்வதை பார்த்து செல்லாயி சற்று மனத்தாங்கல் அடைவாள். அது செம்மை. இப்படியான உறவுச்சிக்கலை நாவல் முழுக்க விரித்து எழுத வாய்ப்புகள் இருந்தும் லஷ்மி சரவணகுமார் அதை அசிரத்தையாக கையாண்டிருக்கிறார். 

//பளியன்கள் ஆத்மா மட்டுமில்லை, அந்தக் காட்டிலிருக்கும் அத்தனை உயிர்களின் ஆத்மாக்களும் மரங்களில் தான் காலா காலத்திறம் சேமிக்கப்படுகின்றன. ஆத்மாக்களுக்கு அழிவில்லை என போது இந்த மரத்தை எப்படி அழித்துவிட முடியும்?...// 
மரம் வெட்டுவதை பற்றி இந்த பத்தியில் சோகங்கள் பிழிந்து கொண்டே போகும். இன்னொரு இடத்தில் பின்வருமாறு எழுதுகிறார். //எந்தவொன்றையும் முற்றாக இந்த மனிதர்களால் அழித்துவிட முடியாது. எல்லா முடிவுகளும் சில எச்சங்களை விட்டுச் செல்கிறதென்பதை இவர்கள் புரிந்து கொள்ள போவதில்லை. இந்தக் காட்டின் ஒவ்வொரு எச்சமும் ஒரு பிரபஞ்சத்தின் துவக்கம் தான்.// 

ஒவ்வொரு எச்சமும் ஒரு பிரபஞ்சத்தின் துவக்கம் என்றால் ஏன் மேலே அந்த பொலம்பல்கள் எழுத வேண்டும். வாசகனிடம் பச்சாதாபத்தை தூண்டி விட்டு பின்னர் ஆன்மீக தத்துவம் நோக்கி பயணிப்பது நல்ல யுக்திதானோ!

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புணர்ச்சி நிச்சயமாக இருந்தே தீர வேண்டும் என  கொள்கையோடு எழுதினால் மட்டுமே இப்படி எழுத முடியும் போல. வடிவேலுவின் புகழ்பெற்ற கல்யாணத்தை நிறுத்தும் நகைச்சுவையில் ஒரு கதாபாத்திரம் சாப்பாட்டையே குறியாக வைத்திருப்பான்.அந்த கதாபாத்திரம் சொல்வது போல,"பாஸ் கக்கூஸ் வழியா ஏறி குதிச்சிகூட சாப்டுற எடத்துக்கு போயிடலாம் பாஸ்" என்ற ரீதியில் வலிந்து திணித்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு புணர்ச்சி காட்சிகளென வைத்தது சிரிப்பையே வரவழைத்தது. சினிமாவையே விஞ்சும் சினிமாத்தனமான காட்சிகள் என்பதால் உவமையும் அப்படியே தோன்றுகிறது. விவரணைகள் முடிந்ததும் ஒரு புணர்ச்சி. நாவலின் குறிக்கோளே எதுவென்று கேட்குமளவுக்கு வாசகனை எரிச்சல் படுத்தியது.

நாவலின் மையமாக உறவுச் சிக்கல்கள் வந்திருக்க வேண்டியவை. கணவன் மூன்று மனைவி மூன்றாவது மனைவியின் முன்னாள் கணவனின் மகன் என்று இருக்கும் களத்தில் உறவுச்சிக்கலுக்கா பஞ்சம்? உறவுச்சிக்கலின் நுட்பத்தை கடலளவு இல்லாவிட்டாலும் கிணற்றளவு கூட ஆழமில்லாமல் வெறுமனே வாய்க்காலின் ஆழத்தோடு மேலோட்டமாக எழுதியது எழுத்தாளரின் படைபூக்கத்திறனையே சந்தேகிக்கும் அளவில் இருந்தது. நண்பனின் காதலியை அடையும் ஒருத்தனை எந்தக் கேள்வியும் கேட்காமல் இருக்கும் மொண்ணைத்தனமான கதாபாத்திரங்களே எல்லா கதாபாத்திரங்களின் சாயலின் ஒரு துளி. யார் யாரை வேண்டுமானாலும் புணர்ந்து கொள்ளலாம் யாருக்குமே மனத்தாங்கல் இல்லை என்ற அளவில் எழுதுவதில் என்ன சுவாரஸ்யமும் உண்மையும் படைபூக்கமும் இருந்து விடப்போகிறது?

கலைக்கும் கமர்ஷியலுக்கும் உள்ள வித்தியாசங்களில் முதன்மையானது உண்மையை சொல்வதும் போலித்தனங்களை தோலுரிப்பதும் தான். கட்டற்ற பாலியல் சுதந்திரத்தோடு அந்த இனமக்கள் வாழ்ந்ததாக கூறுவது எத்தனை பெரிய பொய். ஆதாம் ஏவாள் காலமென்றாலோ கூட பரவாயில்லை நடக்கும் எனலாம். பதினெட்டாம் நூற்றாண்டில் இப்படி எல்லாம் நடந்ததாக சொல்வது வரலாற்று திரீபு தானே. மேலும் மானுட மனங்களின் ஆழங்களை தொட எவ்வளவோ சாத்தியங்கள் இருந்தும் அதை பொருட்படுத்தாமல் எழுதிச் செல்வது எழுத்தாளனின் இயல்பே அல்ல. கேளிக்கைகாரனளவுக்கு தான் உறவுச்சிக்கலை பேசியிருக்கிறார். 

தாய்மை என்பதை அதிசியம் என்றளவுக்கு பெண்களை மிகையுணர்ச்சியாக சித்தரிக்கிறார். காட்டின் உடலும் பெண் தானாம். காட்டின் ஒவ்வொரு உறுப்பும் பெண்ணை பற்றியதாம்.  அப்போதுதான் காட்டை புணர முடியுமோ என்னவோ. சடையன் காட்டின் ஆன்மாவை தெரிந்தவனாம். காட்டிற்கு ஒரு ஆன்மா இருந்தால் மரம் செடி கொடிகளும் அதில் அடக்கம் தானே. ஆனால் மரம் செடிகளுக்கு தனித்தனியாக ஆன்மா இருக்கிறது என்கிறார்.  ஆன்மீகம் தான் கைவரவில்லை; பகுத்தறிவு ஆவது கைவந்ததா? சடையன் ஒரு கட்டத்தில் திடீரென மறைந்து விடுகிறான். இறுதியில் ஒரு காட்சியில் வலம் வருகிறான். நல்ல சினிமா திருப்பம் தான். சடையனும் தங்கப்பன் கதாப்பாத்திரமும் மோதிக்கொள்ளவே இல்லை. தனது மனைவியை கவர்ந்தவனை அவன் எவ்வாறு எதிர்கொள்வான் என்ற அருமையான இடமும் தவறவிட்டார். அதற்கு பதிலாக தான் வாசியும் தங்கப்பனும் மோதிக் கொள்கிறார்கள்.

சமீபத்தில் ஆன்மா என்ற வார்த்தையை இவ்வளவு வன்புணர்வு செய்யப்பட்ட ஒரு நாவலை படித்ததே இல்லை எனலாம்.
// கொல்லப்பட்ட மிருகங்களின் ஆன்மாக்கள் அவளைச்சேர முடியாமல் ஏக்கத்தோடு அந்தக் காட்டையே சுற்றிக்கொண்டு இருந்தன. //
உணவிற்காக கொலை செய்தால் ஆன்மா என்னாகும் என்று எழுத்தாளர் எங்கேயும் வாயைத் திறக்கவில்லை. ஒருவேளை பேய்ப்படங்களில் வரும் ஆன்மா போல கொலை செய்தால் மட்டுமே ஆன்மா இப்படி சுற்றுமோ என்னமோ. மற்ற நேரங்களில் ஆன்மா எங்கே போகும்; என்ன செய்யும்; இவர் சொல்லும் ஆன்மா தான் எது?

// செடிகளை மிதித்து அவர்கள் நடப்பது, தாவரங்களின் குரல் வலையில் மிதிப்பது போன்ற ஒலியை எழுப்பிக் கொண்டிருந்தது.// என்று ஓர் இடத்தில் எழுதும் இவரே இன்னொரு இடத்தில் அதே கதாநாயகன் நடந்து வரும்போது கொண்டாட்டமாக எழுதுகிறார். இன்னொரு இடத்தில் மரம் செடி கொடிகளுக்கு ஆன்மா இருக்கிறது என்கிறார். பிறகு இறந்துபோன மனிதர்களின் ஆன்மாவும் அந்த மரம் செடி கொடிகளில் வாழும் என்கிறார். ஒரு ஆன்மா இருக்க வேண்டிய இடத்தில் இன்னொரு ஆன்மா இருக்குமா? புலியை கொல்வது தவறு. ஏனெனில் அது பளிச்சி அம்மனின் ஆன்மா. ஆனால் காட்டு கொரங்குகளை கொல்லளாம். அதேசமயம் காட்டு கோழிகளையும் கொல்லளாம். அதற்கெல்லாம் ஆன்மா இல்லை. ஆனால் செடி கொடிகளுக்கு கூட ஆன்மா இருக்கிறது.
இஷ்டத்துக்கு எழுத வேண்டியது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு பத்து முறையாவது ஆன்மா என்ற வார்த்தையை உபயோகிக்கிறார். அநேகமாக அவர் இந்த நாவல் எழுதுவதற்கு முன்பாக பஷீரின் எழுத்துக்களை வாசித்து இருக்கலாம். அதன் பாதிப்பில் இப்படி முயற்சித்து இருக்கலாம். அதற்கென்று பத்து பக்கத்திற்கு ஒருதரமா அதைக் கூவி கூவி விற்க வேண்டும்!. தேவையான போது ஆன்மாவை புகழ்ந்து தள்ளியும் தேவையற்ற போது வேட்டையாடுவது ஒரு கொண்டாட்டம் என்றும் ரீல் விடுவதன் நோக்கம் தான் என்ன?. ஆன்மாவை ஜேப்படித்தல். வாசகர்களை ஆன்மீக தளத்திற்கு இழுப்பது போன்ற பாவனைகள். பொய் பித்தலாட்டங்களே எஞ்சுகிறது. கதாநாயகன் தங்கப்பன் அல்ல அவளது மூன்றாவது மனைவியின் மகன் வாசி. தங்கப்பன் வேட்டையாடுவது போதை. ஆனால் வாசி வேட்டையாடுதல் கொண்டாட்டம். இதென்ன ஓர வஞ்சனை? எழுத்தாளன் கதாபாத்திரம் சார்பின்றி எழுத வேண்டும். இல்லையெனில் இப்படி தான்.

தானாகவே பிரசவம் பார்த்துக்கொள்ளும் முறையை ஆதரிப்பதாகவே எழுதுகிறார். குழந்தைக்கு உடல்நல சரியில்லாமல் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கிறார்கள். ஆனால் பிரசவம் சுயமே. சிறுத்தை அடித்து பிழைக்க வைப்பது கூட சொந்த மருத்துவம். ஆனால் குழந்தைக்கு சிறு காய்ச்சல் என ஏன் மருத்துவமனைக்கு போக வேண்டும்? ஓ அப்போதுதான் மருத்துவர்கள் மூலிகையை திருட காட்டுக்குள் வருவார்கள். அடடா இதுவல்லவோ திரைக்கதை. பிறகு சிவப்பு துண்டுக்காரர்கள் வருகிறார்கள். அதான் கம்யூனிஸ்ட்டுகள். அவர்கள் திடீரென வந்தார்கள். நல்லது செய்தார்கள். கிளம்பி விட்டனர். எழுத்தாளர் கம்யூனிஸ்ட் ஆதரவாளராக இருக்கலாம் அதனால் பயன்படுத்தி இருப்பாரோ என்ற அளவுக்கு தான் அந்த இடைச்செருகல்கள் இருந்தது. 

கூகி வா திவாங்கோ எழுதிய இடையில் ஓடும் நதி ( The River between ) பழங்குடி மக்களின் வாழ்வியல் பற்றிய கதைதான். அதில் பழங்குடி மக்களின் நல்லதும் கெட்டதும் இரண்டுமே சொல்லியிருப்பார். அதில் அந்த மக்களின் வளர்ச்சியில் முன்னேற்றத்தில் உண்மையான அக்கறை நமக்கு தெரியும். கானகனில் வெறும் ரொமான்டிசைஸ் பார்வை சலிப்பையே தருகிறது. கூகி தனது நாவலில் உறவுச்சிக்கலை அருமையாக கையாண்டு இருப்பார். ஒரே பெண்ணை கதாநாயகனும் நண்பனும் காதலிக்கும் போது அங்கு ஏற்படும் மனப்போராட்டங்களை அற்புதமாக எழுதியிருப்பார். ஆனால் இங்கு அதே பிரச்சினை மொண்ணைத்தனமாக கையாண்டு இருப்பார். முக்கியமாக கூகி தனது நாவலில் கலாச்சாரம் மாறுதல் குறித்து எழுதியிருக்கிறார். ஒடுக்கப்பட்ட மக்களை கிறித்துவர்கள் உலகம் முழுவதிலும் தங்கள் வசமாக்க நினைத்தனர். அதன் சாதக பாதகங்களை அலசியிருப்பார். தந்தையிடம் இருந்து மகன் அதிகாரம் பெரும் இடங்களை அழகுணர்ச்சியோடு கலையமைதியோடு எழுதியிருப்பார். அதில் வாசகன் சிந்திக்க space கொடுத்திருப்பார். மேலும் அதில் எந்தவித நீதிபோதனையும் இருக்காது.



கானகனில்  மாட்டுக்கறி சாப்பிடும் மேலோட்டமான புரட்சியோடவே அந்த மக்களின் வாழ்வியலை முடித்து விடுகிறார். நீதி போதனை என்பது எது நல்லது எது கெட்டது என்று பிரச்சாரம் செய்து நல்லதை செய்யுங்கள் என்று பிரகடனம் செய்வது. நீதித்வம் என்பது எது தகும் எது தகாதென அதன் கவித்துவ எல்லை வரை சென்று முடிவை வாசகர்களிடமே விடுவது. இடையில் ஓடும் நதி நீதித்வம். கானகன் நீதிபோதனை வகையிலானது. 


எழுத்தாளர் எல்லாவற்றையும் ஸ்பூன் பீடிங் செய்யத் தேவையில்லை. இதில் எழுத்தாளர் சொன்ன விஷியத்தையை ஒரு நூறு முறையாவது சொல்லி இருப்பார். அதாவது பழங்குடி மக்கள் நல்லவர்கள் வல்லவர்கள் அந்த காடும் அதை வழிநடத்தும் பளிச்சியும் நல்லவர்கள். புலி கூட நல்ல புலி. மிருகங்கள் அனைத்துமே நல்லவை. மேலும் சிந்திக்கூடிய ஆற்றலுடையவை. அப்பப்பா முடியவில்லை. மைக் செட்டு போட்டு முழங்காமல் subtle ஆக சொல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் பிட்டு நோட்டீஸ் போல பக்கத்திற்கு பக்கம் ஒட்டியிருக்கிறார். பழங்குடி மக்களை முழுவதும் ரொமான்டிசைஸ் செய்து நாவல் முழுக்க உலவவிட்டிருக்கிறார்.
கலையமைதி என்றால் என்ன என்று கேட்பார் போலிருக்கிறது.

அதைவிட புலிக்கு ஏழாவது அறிவு இருக்கிறது என்பதை சொல்லிவிட்டிருக்கலாம். இறுதிக்காட்சியில் தங்கப்பனை ஏமாற்றி கொள்வதற்காக வாசி புலியை சுட்டது போல நடிப்பான். வாசி மனிதன் நடிக்கலாம். புலியும் இறந்தது போல நடிக்கிறது. அடடா சினிமா திரைக்கதை எழுத்தாளர் கூட இவரிடம் தோற்றுவிடுவார் போலிருக்கிறது. மிருகங்களுக்கு பலிவாங்கும் குணம் இருப்பதே அரிது. அதிலும் இறந்த புலிக்காக அதன் குட்டிகள் பலிவாங்குவது உச்சகட்ட புனைவு. இந்த தத்துவம் உண்மையென்றால் லஷ்மி சரவணகுமாருக்கு நிச்சயமாக நோபல் பரிசு கிடைக்கலாம். அப்படியே அந்த புலிக்கு நடிப்பை கற்றுத் தந்ததிற்காக ஆஸ்காரும் கிடைக்கலாம். புனைவு எழுத்து என்பது ரீல் விடுவது அல்ல என்பதை லஷ்மி சரவணகுமார் புரிந்துக்கொள்ள வேண்டும்.நாவலை முதலில் படித்து விட்டு அவரது நண்பர்கள் கருத்து சொல்லி எடிட்டிங் செய்ததாக முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். அந்த நண்பர்கள் நேர்மையாக இல்லை என்பதை புரிந்து இனிவரும் படைப்புகளில் புனைவை சரியாக எழுத வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன். நல்ல கருவும் விரித்து எழுத வாய்ப்புகள் இருந்தும் லஷ்மி தவறவிட்டதே அதிகம். 



ஆன்மா ஆத்மா ஞானம் என்று பிதற்றிய இந்த படைப்பை யுவபுரஸ்கர் விருதுக்கு தேர்வு செய்தது எவ்வளவு பெரிய மூத்த படைப்பாளியாக இருந்தாலும் அவர் மீதும் சேர்த்தே மதிப்பு குறைகிறது. இந்த நாவலை மொழிபெயர்த்து வேற்று மொழியில் வாசிப்பவர்கள் தமிழில் நாவலே எழுதத் தெரியாது என்றுதான் முடிவுக்கு வருவார்கள். ஆனால் மொழிபெயர்ப்பு அவர்களது உரிமை. விமர்சனம் நமது தொழில்.

உச்சாதுணைகள் : 

கானகன் 
மோக்லி பதிப்பகம் 
விலை ₹200. 

இடையில் ஓடும் நதி.
மொழிபெயர்ப்பாளர் - இரா நடராசன். 
பதிப்பகம் - பாரதி புத்தகாலயம்
விலை - ₹95.


Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :