அவர்கள் குழந்தைகள் அல்ல

Pc- பேசும் புதிய சக்தி இதழ்


இந்த நூற்றாண்டின்
குழந்தைகள்
சீக்கிரமே பேச கற்றுக் கொள்கிறார்கள்
நடக்கவும்
ஆன்ட்ராய்டு போனில் விளையாடவும்
சமூக வலைத்தளங்களில் தனக்கென
ஒரு கணக்கை உருவாக்கவும் செய்கிறார்கள்
பெரியவர்கள் போல
காதலிக்கவும்
சீக்கிரமே பிரிந்து விடவும் செய்கிறார்கள்
அதற்காக முதலில் வருந்தவும்
பின்னர் சிரிக்கவும் செய்கிறார்கள்.

உடல்களை அடையாளம் காண்பதிலும்
அனுபவிப்பதையும்
புகைப்பதையும் குடிப்பதையும் கூட
சீக்கிரமே வெறுத்துமிடுகிறார்கள்.

கடவுளை கேள்விக்கேட்க கூட
அவர்கள் தயங்குவதில்லை
அவர்களிடம், " மலை உச்சியில் தனித்து விடப்பட்ட ஒரு சிறு புல்தான் கடவுள்
இது தெரியுமா!" என்று கேட்டுப் பாருங்கள்
உங்களிடம் மனநல மருத்துவமனைக்கு வழி
எந்தப் பக்கம் என்று சரியாக காட்டுவார்கள்
தேவைப்பட்டால் உங்களை
கையோடு மனநல காப்பகத்தில் சேர்த்தும்
விடுமளவுக்கு அவர்கள் புத்திசாலிகள் தான்.

அவர்கள் குழந்தைகள் அல்ல
வளர்ந்தவர்களை விட வளர்ந்தவர்கள்.

இந்த சிறிய பாதையின்
வளைவுகளின் விளிம்பிற்கு
வெகு சீக்கிரத்திலே வந்து சேர்ந்து விடும்
இந்நூற்றாண்டு
இளம் பயணிகள்
தங்கள் தனிமையை தீர்த்துக்கொள்வதற்காக
எல்லாவற்றையும்
கடவுளை தவிர்த்து எல்லாவற்றையும்
மிகச் சரியாகவே அறிந்தும் கொள்கிறார்கள்.

தனிமைக்கு பதிலாக
தனக்குள் எதை நிரப்புவது என்று
தெரியாமல்
தற்கொலையில் வந்து நிற்கிறார்கள்
பொறுங்கள்
"தற்கொலை ஒன்றும் எளிமையானது இல்லை
அது ஒரு வீரத்தின் உச்சம்" என்று
வாசகத்தை உறக்கப் படித்து விட்டு
இந்த உலகை நீங்கி
அவசரம் அவசரமாக செல்கிறார்கள்
எங்கே எனத் தெரியாமல்… 


பேசும் புதிய சக்தி இதழில் மார்ச் 2018 வெளியீடு

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :