முறைப் பெண் - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் பறவை வேட்டை எனும் சிறுகதை தொகுப்பில் இருந்த  ஒரு சிறுகதை 'முறைப்பெண்’.



ஏதோ ஒரு பக்ஷனுக்காக அக்கா வீட்டீற்கு போகும் அசோகமித்திரன் அவர்பால் அன்பு கொண்ட இலக்கிய நண்பர்கள் ஒரு வேளை சாப்பாடு தம்மோடு சாப்பிட வேண்டும் என்று அன்புக்கே உரிய உரிமையுடன் சொல்லுவார்கள். அந்த வேளை அக்கா வீட்டிலும், அந்த நண்பர் வீட்டிலுமாக சாப்பிட வேண்டிய கட்டாயம். சூழ்நிலை காரணமாக  எல்லோரிடமும் சாப்பிட்டு கடைசியில் அக்கா வீட்டு பக்ஷனில் வாந்தி எடுத்து படுத்த படுக்கையில் வீழ்வார். அவரது அக்கா மகளை அவருக்கு கல்யாணம் செய்யலாம் என்றிருந்த யோசனையும் போய்விடும். இதை அவருக்கே உரிய நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார்.

மேலோட்டமாக பார்த்தால் இதெல்லாம் ஒரு கதையா என்று தான் தோன்றும். ஓவராக சாப்பிட்டால் உடல் உபாதை வருவது எல்லாம் ஒரு பெரிய கதை ஆகிவிடுமா என்று தோன்றலாம். கதையின் மையச்சரடே சாப்பாட்டை சாப்பிடுவதோ அக்கா மகளை பற்றியோ அல்ல. அன்பின் பெயரால் நடக்கும் அராஜகம் பற்றிய கதைதான் இது. அன்பினால் ஒருவரை ஒடுக்கவும் அடக்கி ஆளவும் செய்வது பாசிசம். அவர் சாப்பாடு வேண்டாம் என்று சொன்னால் அக்கா கோபித்துக் கொள்வாள் அக்கா மகள் கோபித்துக் கொள்வாள் இலக்கிய நண்பர்கள் கோபித்துக் கொள்வார்கள் இப்படி ஒவ்வொருவரும் அவரை சுரண்டுகின்றனர். ஆனால் இதையெல்லாம் படிக்கும் போது நமக்கு அந்த தொணி பிடிபடாது. நகைச்சுவையாகவே எல்லாவற்றையும் பதிவு செய்வது தான் அசோகமித்திரன் ஸ்டைல். கடைசியாக கூட அவர்கள் சுரண்டுவதை பற்றி எதுவுமே சொல்லமாட்டார். நகைச்சுவையாகவே முடித்தும் விடுவார். கதாபாத்திரங்களின் எண்ணக் கொந்தளிப்புகளை பெரிதாலும் அசோகமித்திரன் பொருட்படுத்துவதில்லை அல்லது குறிப்பிடுவதில்லை. அவர்களின் செயல்களை மட்டுமே விருப்பு வெறுப்பின்றி சொல்லுவார். பின் நவீனத்துவம் என்பது அசோகமித்திரன் கதைகளில் இருப்பது போன்றுதான். எதையுமே சரி தவறென யாரையும் கை நீட்டாமல் எழுதிச் சென்று விடுவார். நாம்தான் புரிந்துகொள்ள வேண்டும்.

அசோகமித்திரனின் ஒவ்வொரு சிறுகதை குறித்தும் எழுத வேண்டும் என்ற ஆசை நெடுநாட்களாகவே இருந்தும் வருகிறது. காலம் கைக்கூடி வருவது போல் தெரிந்தாலும் இதெல்லாம் ஏதோ ஸ்பூன் பீடிங்காக தெரிவதால் விட்டு விடுவேன். இந்த கதைகளை எல்லாம் ஒவ்வொருவரும் படித்து தான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி நினைப்பதே பாசிசம் என விதாண்டாவாதம் செய்வது சரியில்லை. 

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :