இடையில் ஓடும் நதி - கூகி வா திவாங்கோ


இது கிக்கியு மொழியில் எழுதப்பட்ட கென்ய நாவல் பிறகு ஆசிரியர் கூகிவா திவாங்கோவினாலே       (Ngũgĩ wa Thiong'o) ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. The river between என்று கூகிளில் தேடினால் கிடைக்கும். தமிழில் இரா.நடராசன் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலம் தெரியாத என்னைப் போன்ற தற்குறிகள் தமிழிலேயே படிக்கலாம். மொழிபெயர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் சாகித்யம் எனக்கு இல்லை என்றாலும் படிக்க நன்றாகவே இருந்தது. 




கென்யாவின் பழங்குடி மக்களின் பற்றிய கதை. அந்த மக்களின் கலாச்சார வாழ்வியலை பேசுகிறது. கலாச்சாரம் என்பதே காலத்திற்கேற்ப மாறக்கூடிய ஒன்று. பழையன கழிந்து புதுமை புகுத்தலே மனித நாகரிகத்தின் வளர்ச்சி படிநிலையை காட்டுகிறது. அதனுடன் காலனித்துவ எதிர்ப்பு அரசியலை எவ்வாறு பின்னி பிணைந்து கொண்டு எழுதியுள்ளார் என்பது தான் இந்த நாவலை தட்டையான ஒன்றிலிருந்து பல பரிமாணங்கள் கொண்டுள்ள ஒன்றாக மாற்றியது எனலாம். ஆண்களின் பிறப்புறுப்பு முன்தோலை அகற்றும் பழக்கத்தையும் பெண்களின் க்ளிட்டோரிஸை கீறி விடும் அறுப்பு பழக்கத்தை கொண்ட பழமையான மக்களின் வாழ்வியல் அங்கு வரும் ஆங்கிலேயர்களால் எவ்வாறு நிலைக்குலைகிறது என்பதையும் புதிய பழக்கங்களை பின்பற்றுவதா பழைய பழக்கங்களை பின்பற்றுவதா என்ற குழப்பமும் அருமையாக பிணைந்து எழுதப்பட்டுள்ளது. இரண்டு தரப்பும் நியாயங்களையும் சொல்லி முடிவை நம்மிடமே விடுகிறது. ஆனால் இந்த பழக்கத்தை உடையவர்கள் இசுலாமியர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவர்கள் இஸ்லாமிய மக்கள் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை. அவர்களின் கடவுள், வாழும் முறை முற்றிலும் தனித்துவமானது.

இரண்டு மலைகளுக்கு ( தற்போது உள்ள kisumu, kakamega ) இடையே ஹோனியா எனும் நதி செல்கிறது. இரண்டு மலையக மக்களுமே இந்தியா- பாகிஸ்தான் போல இருக்கிறார்கள். அவர்களை வைத்து கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராட துடிக்கும் வையாகி எனும் ஒரு மீட்பரின் கதை என்று சுருக்கமாக சொல்லலாம். ஆனால் அதில் மீட்பர் தான் கதாநாயகன் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. நாவலில் வரும் நியம்புரா எனும் கதாநாயகியின் தந்தை ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார். திட்டமிட்ட சதி. அவரையே கூட மீட்பராக மாறிவிடும் கணங்களை நாவலில் உலவ விட்டிருக்கிறார் கூகி.

நாவலில் ஆன்மீகத்தை தொடும் பல இடங்கள் வருகிறது. அதேசமயத்தில் எதார்த்த நிலையை மீறிவிடாதது கூட கூகியின் ஒரு கெத்து என்றே சொல்லலாம். ஒரேயொரு நாளில் மாற்றம் வந்துவிடாது என்பதை தொட்டுச்செல்லும் இடம் வரலாற்று ரீதியான எதார்த்தமானது. இது ஆங்கிலேயர்களுக்கு எதிரானதாக தென்பட்டாலும் இயேசுவைப் போல இதில் வரும் வையாகி எனும் கதாபாத்திரம் மீட்பராகி படும் தனிமனித துன்பங்கள் விவிலியத்தையே நினைவூட்டியது.

இதில் காதல், காமம், நட்பு, துரோகம், பாசம், ஆண் பெண் உறவுகளின் ஈகோ என எல்லாமே இருக்கிறது. நியம்புரா என்ற பெயரே வசீகரமாக உள்ளது. நாஸ்தென்கா என்ற பெயருக்கு பிறகு நியம்புரா என்ற பெயரில் ஒரு லயம் கூடி வருவதை பார்க்கிறேன். இந்த நாவலைப் படித்து எத்தனையோ நாட்கள் ஆன பிறகும் காட்சிகள் மனதில் விரிகிறது. திட்டமிட்ட கலாச்சார மாற்றங்களை நுழைத்த ஆங்கிலேயர்களை ஒட்டுமொத்தமாக விலக்கி விடாமல் சாதகம் பாதகங்களை சொன்னது ஒரு எழுத்தாளனுக்கே உரிய பக்குவம் வெளிப்படுகிறது. 






ஒரு மொழி அழியும் என்றால் அது அந்த மக்களின் வாழ்வியலை / நினைவுகளை அழிப்பதற்கு ஒப்பாகும் என்று தோழர் கூகி வா திவாங்கோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இன்று கென்யாவின் 87% கிருத்துவர்கள் எப்படி வந்தார்கள் என்று யோசிக்க வேண்டும். அவர்களின் தாய்மொழியும் எந்த அளவிற்கு உள்ளதையும் கவனிக்க வேண்டும். ஆப்பிரிக்க கருப்பர் இன நாவல் வரிசையில் குறிப்பிடத்தக்கதாக பேசப்படும் இந்நாவல் காலனித்துவ எதிர்ப்பு அரசியலிலும் மாற்று கலாச்சார அரங்கிலும் ஒரு பாடப்புத்தகமாகவே பயன்படவல்லது என்று மொழிப்பெயர்பாளர் சொல்கிறார்.

விக்கிப்பீடியாவில் கென்யாவை பற்றி படித்த போது இந்நாவல் பள்ளி பாடத்திட்டத்தில் உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக இருந்தது. உண்மையில் மாற்று கலாச்சார அரங்கிலும் இது தொட்டு பேசும் அரசியல் நுட்பமானது. சரியானது. தேவையானது. லைப்ரரியில் எடுத்த புத்தகம்.

பதிப்பகம் - பாரதி புத்தகாலயம்
விலை - ₹95.


Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :