மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் - எம்.கே.மணி


இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளாலும் மொழியை கையாளும் விதத்தாலும் மட்டுமே இலக்கியமாகிறது. வாழ்க்கையைச் சொல்லுங்கள். அதன் நுட்பங்களை. அதன் மீதான உங்கள் சொந்த அவதானிப்புகளை. உங்கள் மனதை ஆதாரமாக்கி வாழ்க்கையை விவரியுங்கள். இலக்கியம் எப்படி எப்படி வளர்ந்தாலும் கடைசியில் மானுட மனதைச் சிறப்பாகச் சொல்வதே இலக்கியம் என்ற விதியே எஞ்சி நிற்கிறது என ஜெயமோகன் ஒரு முறை எழுதியது நினைவுக்கு வருகிறது. மணி ஸாரின் ஒவ்வொரு கதையிலும் வரும் கதாபாத்திரங்கள் இந்த உலகம் அழியும் தருவாயிலும் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் உயிரும் சதையுமான கதாபாத்திரங்கள். ஆண் எப்படிப்பட்டவன் அவனது கண நேர உணர்ச்சிகளை கூட எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார்.



“வர வர நீ ஏன்மணி ஸார் மாதிரி எழுதற. ஏன் எப்ப பாத்தாலும் அவரையே தூக்கி வெச்சி பேசர. யாரு இந்த மணி ஸார்? ஒருவேளை சர்காஸமா? கிண்டல் பண்றியா ?.”  ங்கோத்தா மணி ஸாருக்கு சொம்பு தூக்கறியானு மட்டும் தான் யாரும் ஓப்பனாக கேட்கவில்லை. ஒருவரை பாராட்டி பேசுவது கூட இப்படியான நிலைமைக்குத் தான் கொண்டுபோகும் என்று நினைக்கிறேன். அதனாலயே புத்தகம் வெளியீடு முடிந்து கொஞ்சம் காலங்கடந்து மீண்டும் படித்து விட்டு எழுதுகிறேன். அப்போதுமே அந்த உணர்ச்சி பெருக்கை மட்டுப் படுத்தமுடியவில்லை. எழுத்தாளர் எம்.கே.மணி என்று தான் எழுத வேண்டும். தனக்கு அவரைத் தெரியும் என்ற சுயப்பெருமைக்காகவே மணி ஸார் என விழிக்கிறேன்.

எனக்கு வடிவங்கள் மீதான கவர்ச்சி மோகம் கிடையாது. அது வடிவ ரீதியாக ஸ்டைல் காட்டினாலும் விலக்கிவிடுவது இல்லை. இசை மேடையில் பேசியது போல மணி ஸார் பர்பக்ஷெனை இருக்குமாறும் இல்லாதவாறும் வேண்டுமென்றே தான் எழுதுகிறாரா என்று கேட்டார். அது அப்படி தான் என்று நம்புகிறேன். சில கதைகளை பலமுறை படிக்க வேண்டிவரலாம். Conjunction word இல்லை என்று இசை நொந்துக்கொண்டார். அந்த யுக்தி சுஜாதாவிடம் இருந்து வந்திருக்கும் என்று நினைக்கிறேன். விரைவாகவும் எளிதாகவும் வழவழனு இழுக்காமல் சொல்லும் போது எதற்கு கன்ஜங்ஸன் வேர்டு?

இதில் இருக்கும் எந்த கதையும் சோடைப்போகாது. காமத்தின் எல்லா வகையான விளிம்புகளிலும் பட்டுத் தெறிக்கும் மணி ஸாரின் எழுத்துக்களை கலாச்சார காவலர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. சரோலமாவின் பின்னுரை அட்டகாசமாக டூ தி பாய்ன்டாக இருக்கிறது. அது - “ அன்பின் பெயரால் குடும்ப நிறுவனங்களில் நடக்கும் அன்றாட அடாவடித்தனங்களை, ஆண் பெண் உறவின் பாசாங்குகளை, கணம் தோறும் நிகழும் வாழ்வில் காமம் தோலுரிக்கும் சக மனிதர்களின் கீழ்மைகளை கொஞ்சமும் பொருத்தப்பாடு இல்லாத மேலோட்டமான உறவுகளின் சீல்பிடித்தலை, அதன் சகலவிதமான சீரழிவுகளை எம்.கே.மணி இந்த கதையில் உலவவிட்டுருக்கிறார்”.

காந்தியை ஏன் பிடிக்கும் என்று ஒரு முறை எழுதியிருந்தேன். அவரது kettle எனும் வார்த்தையை காஃபி அடிக்காமல் இருந்த நேர்மையை விட அவரது அப்பா சாகும் தருவாயில் இருக்கும் போது மனைவியுடன் சல்லாபத்தில் ஈடுபட்டு இருந்த காட்சியை சொல்லும்போது காந்தி மற்ற அற்ப மானிடர்களை விட உயர்துவிட்டார். அது மனித மனங்களின் நேர்மையின் வெளிப்பாடு. அந்த அற்புதமான தருணம் தரும் உணர்வை இத்தொகுப்பில் பல இடங்களில் பார்த்தேன். காந்திக்கு ஏற்பட்ட அதே உணர்வைக் கூட ஒரு கதையும் கொண்டுள்ளது. அதன் தலைப்பு- தொட்டால் பூ மலரும்.

எல்லா கதைகளிலும் எல்லா பக்கங்களிலும் பகடி இழையோடியவாறே இருக்கும். அந்த பகடி அசலான ஒன்றின் வெளிப்பாடு. அதில் போலித்தனங்களை வம்புக்கு இழுத்திருப்பார்.  தமிழ் சினிமா, தெய்வீக காதல், கற்பு , கலாச்சாரம் இவற்றையெல்லாம் வெளுத்து வாங்கியிருக்கிறார் பகடியின் ஊடாக.
“கடவுள் என்றால் ஒரு லாவகம் வேண்டாமா ? அநியாயத்துக்கு ஸ்லோ மோஷன்”
“ கேன்ல என்ன மச்சான் கஞ்சித் தண்ணியா”
போன்றவை அந்த பகடியின் சொற்பமான சில சான்று. படித்துவிட்டு சிரிப்பை அடக்க முடியாது. அது சிரிப்புடன் மட்டுமே நின்றும் விடுவதில்லை என்பதே இந்த தொகுப்பின் சாதனை. இது போல எல்லா கதைகளிலும் நிறைந்திருக்கிறது.

பால் வீதி என்ற தலைப்பே இந்த தொகுப்பிற்கு ஏற்றதாக ஆசிரியருக்கு தோன்றியது. எனக்கும் இந்த கதைகளை படிக்கும் எவருக்குமே அப்படித்தான் தோன்றும். இந்த உலகமே பாலியல் வீதியில் தானே சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் சில காரணங்களால் பதிப்பாசிரியர் வேறொரு தலைப்பை வைத்து விட்டனர். அதுவும் தட்டையான தலைப்பாக அமையவில்லை என்பதே சரியானது. மீசையில் கருப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம். படிக்க படிக்க உள்ளுக்குள்ளாக சில படிமங்கள் உயிர்தெழுகிறது.



எல்லா கதைகளுமே பிடித்திருந்தது.  “சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்டு” “தொட்டால் பூ மலரும்” “கற்பு” “உடன்படிக்கை” “சரி விடு பாத்துப்போம்” “பால்வீதி” என்று பிடித்த கதைகளை அடுக்கினால் எல்லா கதைகளுமே வந்துவிடும் போல் இருக்கிறது. எம்.கே.மணி அவர்களின் கதைகளை படிக்கும் போது அவை மனதிற்குள் ஒரு விசுவலாக ஓடிக் கொண்டிருக்கும். ஷார்ட் பிலிம்கான திரைக்கதை போன்றும் சிலசமயங்களில் உணர்ந்திருக்கிறேன். “சுழலுகின்ற சில காதல் கதைகள்” “சரி விடு பாத்துப்போம்” என்ற கதை எழுதப்பட்டிருக்கும் விதம் அபாரமானது. அதை எத்தனை முறை எழுதி எழுதி எடிட்டிங் செய்திருந்தால் அந்த நேர்த்தி வந்திருக்கும் என்று வியந்திருக்கிறேன். சொல்லப் போனால் எல்லா கதைகளுமே எழுதப்பட்டிருக்கும் விதம் அப்படித்தான் என்று தோன்றுகிறது. செங்கல் கோட்டையில் இருந்து ஒரு செங்கலை உருவினால் அது உருகுழைந்து விடும் அளவுக்கு கச்சிதமாக வார்த்தைகளையும் வரிகளையும் பயன்படுத்தி இருக்கிறார். இதையே வேறு யாராவது எழுதி இருந்தால் பல குறுநாவல்கள் வெளிப்பட்டிருக்குமோ என்னமோ. எவ்வளவு தான் இலக்கியம் படித்தாலும் ஆண் பெண் உறவுகளென்று வருகையில் உடைந்து நொருங்கிப் போவர்களாகவே இருக்கிறோம். மேலும் அவ்வளவு எளிதில் நாம் யோக்கியர்கள் ஆவதில்லை என்பது வெளிப்படை. பொதுவெளியில் வேண்டுமானாலும் நம்மை தயாள சிந்தனை உடையவர்களாக எளிதாக கட்டமைத்துக் கொள்ளலாம். அது மனதளவில் அவ்வளவு எளிதானதல்ல என்பதை இத்தொகுப்பில் உள்ள பல கதைகள் முன்னிறுத்துவதாக தெரிகிறது. அவரது வலைத்தளம் - http://mkmani-sulal.blogspot.in/?m=1

சந்தோஷ் நாராயணனின் இத்தொகுப்பிற்கான முகப்புப் படம் போல ஆணின் முகமூடிகளை உறித்து எரிந்து விட்டு நிர்வாணமான ஆண்களின் ஆதியுணர்ச்சிகளை சொல்லும் ஒரு அசலான தொகுப்பு. ஆனால் இதன் மொழி நடை கொஞ்சம் சினிமா வீச்சு இருப்பதாக தெரியும். அது அவரது இயல்புகளிலிருந்து வெளிப்பட்ட ஒன்று. ஆரம்பத்தில் சொன்னது மாதிரி வாழ்க்கையை பற்றிய அவதானிப்புகளால் இது சிறந்த இலக்கியப் படைப்பென நம்புகிறேன்.

இந்த புத்தகத்தை பெற பாதரச பதிப்பகத்தை அணுகுங்கள். Mb.no. 7299239786.
அல்லது www.commonfolks.com இணையத்தளத்திலும் வாங்கலாம்.
விலை ₹120 .

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :