கொமோரா - லஷ்மி சரவணகுமார்


ஆரம்பத்தில் நடந்த களேபரத்திற்கு பாதியிலேயே நிறுத்திவிட்டு இருந்த நாவலைத் தொடர சில அடியாட்களின் சத்தம் அதிகமாக இருப்பதும் அவர்கள் சொல்லுவதே உண்மை என்று பிரகடனம் செய்வதை புரிந்து கொள்ளத்தான். தன்னை நியாயவனாக கருதிக் கொள்ளும் எவரும் அந்த திரைப்படத்தை ( First they killed my father) பார்த்து விட்டு நாவலில் வரும் அந்த கம்போடியா குறிப்புகளை படிக்கலாம். சில அன்புக்கு அடிமை நான். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். அவரவர் நியாயம் வெளிப்படுவதை பார்த்தவாறே இருக்கிறேன்.






சரி. எனக்கு தெரிந்த உண்மையை சொல்ல வேண்டுமானால் கம்போடியா குறிப்புகள் எல்லாமே தேவையில்லாத திணிப்புகளாகவே தெரிந்தது. அந்த கதையை ஏன் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை. ஒரு பிரபலமான நகைச்சுவை டயலாக் போல ‘ அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்? நானா சம்பந்தம் படுத்திக்கிட்ட’ என்பது போலவே தெரிந்தது எனக்கு. அதைப் படிக்கும் போது ஒரு கட்டத்தில் மொழி கூட மெரினா போராட்டத்தின் போது வந்த வாட்சப் மேசஜ்களை போல பிரச்சாரத் தொணியை நினைவுப்படுத்தியது.

சத்யா பற்றி இந்த நாவலுக்கு முன்னாடியே அவர் அடிக்கடி எழுதுவதை படித்திருக்கிறேன். அப்போதே அந்த உணர்ச்சி பூர்வமான வரிகள் பிடித்திருந்தது. நாவலில் இருப்பது அந்த கதாபாத்திரம் பற்றிய மதிப்பை அதன் வீரியத்தை அதிகரிக்கும். மற்றபடி சாதியின் உக்கிரம் சினிமாவில் வருவது போலவே இருந்தது. இன்னமும் பெரியதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. வழக்கமான சினிமா காதல் கதையாகவே முடிந்திருந்தது. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை எப்படியான உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற பகுப்பில் உள்ளவை கவனிக்க தக்கவை.



கதிரின் பார்க்கும் பெண்களை எல்லாம் புணரத்துடிக்கும் வெளிப்படையான எண்ணம் ஒவ்வொரு ஆணுக்கும் இருப்பதுதான்.   சத்யாக்கு பிறகு யாரையும் காதலிக்க தோன்றவில்லை என்பதெல்லாம் ஒரு சப்பைக்கட்டாகவே தோன்றுகிறது. ஏனெனில் அத்தனை பெண்களை புணர்ந்தும் அவர்கள் காதலுடன் புணரவில்லை என்பதெல்லாம் போகஸ். அது மற்ற பெண்களை கவரும் ஒரு யுக்தி. தன்னை பற்றி பச்சாதாபம் வரவழைக்கும் செயல். அராத்து மாதிரி ரீல் விட்டு எழுதுவது என்பது இதுதானா 😷.

லஷ்மி சரவணகுமார் சாருவை போல மாறி வருகிறாரோ என்று கவலையாக இருக்கிறது. ஏனெனில் புனைவு என்பதற்கு கடுமையான ஆற்றல் தேவை. அவரது இரண்டு வலைத்தளத்தில் இருப்பதை எல்லாம் படித்தவர்களுக்கே தெரியும் இதில் வரும் கதையெல்லாம் சொந்தக் கதை என்று. சொந்தக் கதைகளையும் சோகக் கதைகளையும் எழுதிவிட்டு அதை fiction என்று மல்லுக் கட்டுவது பரிதாபமாக இருக்கிறது. கம்போடியா குறிப்புகளில் கூட அந்த படத்தில் வரும் கேப்டன் குடும்பம் அப்படியே வருகிறது. அதில் ஒரு கேரக்டரை சொறுகி இருப்பது என்பது புனைவில் வருமா? சொந்தக் கதைகள் இலக்கியம் ஆகுமா என்பதும் விவாதத்திற்கு உரிய ஒன்று. அதைப்பற்றி ஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட போது, “ அது ஆசிரியரின் நோக்கத்தை பொருத்து. எதையெல்லாம் சொல்ல வேண்டும் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என தெரிந்திருக்க வேண்டும். நோக்கம் என்பது அதில் வரும் பெரும்பகுதியை குறிப்பிடுகிறது”. அப்படி பார்த்தால் இந்த நாவலின் நோக்கத்திற்கும் வரும் கதைகளும் தேவையில்லாத ஒன்றாகவே இருக்கிறது.

தந்தையை கொலை செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் அவ்வளவு காத்திரமாக இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. எனக்கு அது தேவையில்லை என்று தோன்றியது. ஒரே ஒரு வார்த்தை தப்பாக பேசிவிட்டவனை எல்லாம் கொலை செய்யும் ஆட்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த நோக்கத்தை விட்டு விட்டு சிதறிச் செல்லும் கிளைக் கதைகளே அதிகம். முக்கியமாக கதிர் எனும் கதாபாத்திரம் நாவல் முழுக்க ஒரே மனநிலையில் தான் வருகிறது. கதாபாத்திரம் வளர்ச்சி அடைந்ததாகவே தெரியவில்லை. சதைகள் மட்டுமே வளர்கிறது. இதெல்லாம் புனைவில் கைக்கூடுவில்லை என்றால் அது எப்படி நாவலாக மாறும் என புரியவில்லை. சொந்தக் கதைகள் சொல்லுவதும் எழுதுவதும் எல்லோருக்கும் வெல்லம் போலத்தான். ஆனால் அது கலையாக மாறுமா என்று யோசிக்க வேண்டும். முதலில் இதை புனைவிலக்கியம் என்று சொல்லலாமா என்பது கேள்விக்குரியது.

மேலும் கதாபாத்திரங்கள் பேசும் ஆபாச வார்த்தைகள் சில நேரங்களில் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே தோன்றியது. ஒரு இடத்தில் சத்யா பேசும் போது “அலாதியான பெண் தன்மை உன்கிட்ட…” என்று சொல்லுகிறார். பி.எஸ்.ஸி. பர்ஸ்ட் இயர் படிக்கும் பெண் அலாதியான என்ற வார்த்தையை உபயோகிப்பாரா என்பது சந்தேகமே. அதெல்லாம் இலக்கியம் படிக்கும் ஆட்களாதான் சாதாரணமாக பேசுவது. அந்தப் பெண் இலக்கியம் படிப்பவரா என்றெல்லாம் தெரியாது. இது நாவலா அல்லது ஒருவரது டையரிக்குறிப்புகளா என உறுத்தலாகவே இருந்தது. ஆனால் இந்த நாவலின் வடிவம் அழகாக இருந்தது. அந்த தலைப்புகளும் நாவலின் தலைப்பும் எல்லாமே வசீகரமாகவும் இருந்தது. கதிரின் அப்பாவிற்கு அப்படியே எதிரான ஒரு அப்பா ( நண்பனின் அப்பா) நாவலில் வருவது சிறிது சமநிலையை பேணியது.

இந்த நாவலின் மையச் சரடு “அன்பை போலவே வெறுப்பையும் மறைக்காமல் காட்டிவிட வேண்டும்”என்று சொல்லுகிறது. முதலில் படிக்கும் போது அடடே என்று நானும் அடிக்கோடிட்டு இருந்தேன். ஆனால் பிறகு இதெல்லாம் சுவாரஸ்யமான போலிகள் என தோன்றியது. ஏனெனில் சத்யாவை கொன்ற கொடும்பாவிகளும் கம்போடியா இனப்படுகொலை கூட இந்த தத்துவத்தை பயன்படுத்திக் கொண்டு தன் தரப்பை நியாயம் என வாதாடலாம். அதனால் இது தவறான மேம்போக்கான வசீகரமான ஒரு போலியான தத்துவமே.


சந்தோஷ் நாராயணனின் அட்டைப்படம் செம்மை.

கதிர் சொல்லும் அந்த பைபிள் வசனங்கள் எல்லாவற்றையுமே எழுத வேண்டிய அவசியமில்லை. அதையெல்லாம் கூட குறைத்திருக்கலாம். இதெல்லாம் விமர்சனப்பூவா என்று கேட்பவர்களுக்கு இல்லை குஷ்புபூ என்று பதிலளிக்க ஆசை. எது மனிதனை மனிதனிடமிருந்து துவேஷம் பாராட்டாத எழுத்துக்களோ அதுவே நல்ல படைப்பு என்று அசோகமித்திரன் சொன்னதோடு இதை முடித்துக் கொள்கிறேன். 

Comments

Popular posts from this blog

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :