பச்சை நரம்பு - அனோஜன் பாலகிருஷ்ணன்


“எழுத்தாளனின் முதிர்ச்சி என்பது  வயதை சார்ந்தது அல்ல. அது வயதை தாண்டிய மனதின் முதிர்ச்சியை சார்ந்தது” என்று விமலாதித்த மாமல்லன் கி.ரா.பற்றி சொன்னது அப்படியே அனோஜனுக்கும் பொருந்தும். இந்த வயதில் அனோஜனின் மொழியும் பக்குவமும் பிரமிக்கத்தக்கது. அநேகமாக ஒத்த வயதுடைய எங்களை போன்றவர்களுக்கு அது பொறாமையாகதான் இருக்கும்.


அனோஜன் தனது காத்திரமான விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு படைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். விமர்சனங்கள் வைப்பவர்கள் அவ்வளவு காத்திரமாக படைப்புகளை எழுதுவதில்லை என்று அனோஜன் பற்றி யாரோயொருவர், ஒரு முறை எழுதியிருந்தது நியாபகம். அந்த லாஜிக்கில் எனக்குமே குழப்பம் இருப்பதால் அது பொய்யாக வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனோஜனின் விமர்சனங்கள் மிக மிக முக்கியமான ஒன்றாகப் படுகிறது எனக்கு. அதை செம்மத்தியாகவே செய்தும் வருகிறார். அதற்கு அவரது வலைத்தளமே(www.annogenonline.com) சாட்சி.

விமர்சனம் என்ற போர்வையில் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. (அது சினிமா ஆனாலும் சரி). வாசகர்களே அதை கன்னி மனதுடன் படித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த தொகுப்பில் பத்து கதைகள் இருக்கின்றன. “பலி” எனும் கதையில் அனோஜனின் பக்குவம் அளப்பரியது. இந்த விஷயத்தில் இன்னமும் உணர்ச்சி வசப்பட்டு பேசும் அநேக மனிதர்களை தெரியும். ஆனால் அதில் இருந்த சாதக-பாதகமான விஷயங்களை பேசுவது கூட குற்றமாக கருதப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி அனோஜனின் அணுகுமுறை சிறப்பாக மிளிர்வது இந்த கதையில் பார்த்தேன். “இங்கிருக்கும் சிறுசுகளையே கொன்றுவிட்டு யாருக்காக மண் மீட்க போகிறார்கள்?” என்ற ஒற்றை வரியில் இருக்கும் வலியையும் அபத்தங்களையும் அனுபவித்தவர்களுக்கே புரியும். ஏற்கனவே இதழில் வெளியான கதைதான். பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை எனக்கு. இதில் புலி எதிர்ப்பு ஆதரவை தாண்டி மனிதநேயம் என்ற ஒன்று மிளிர்வதை கண்டேன்.



“வாசனை” என்ற கதையும் ப்ரத்யேகமான ஒன்றுதான். சொல்லப்படாத காதலின் துயர் கதை முழுவதும் விரவியிருந்தது. உறவுகளை பற்றி இந்த தொகுப்பில் நிறைய கதைகள் இருக்கின்றன. எல்லா கதைகளையும் நம்பும்படியாக இருப்பது தான் இந்த புனைவின் மிகப்பெரிய வெற்றி என்று நினைக்கிறேன். எந்த கதையை படிக்கும் போதும் அந்நியமாகவே தோன்றவில்லை. மேலும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்திய இடங்களிலெல்லாமே சென்சிபலாக இருந்தது. சில எழுத்தாளர்கள் எனக்கும் அந்த வார்த்தைகள் எல்லாம் தெரியும் என்று வலிந்து திணித்து எழுதுவதை பார்த்தவாறு தானே இருக்கிறோம்.

“இச்சை” என்ற கதை என் வாழ்வில் நடந்தது. உண்மையில் புனைவு என்பதற்கு மிகப்பெரிய ஆற்றல் தேவை. இந்த கதை அப்படியே என் வாழ்க்கையை எழுதியது போல இருந்தது புனைவின் மகத்தான வெற்றியாக கருதுகிறேன். “கிடாய்”என்ற கதையும் நெருக்கமாக உணர்ந்தேன். ஒரு இடத்திலாவது ஓவராக எழுதி சொதப்பி விடுவாரோ என்று பதைபதைப்பாக படித்தேன். எங்கேயும் நெருடலில்லை. தெளிந்த ஆற்று நீர் போல கதை ஓடிக்கொண்டிருந்தது. அனோஜனின் கதை சொல்லும் முறையே அவசரப்படாமல் புறவயமான சித்தரிப்புகளுடன் ஒரு ஒழுங்கோடு இருப்பதாக தெரிகிறது. அந்த கதையிலும் வரும் தந்தையின் கதாபாத்திரம் அசலான ஒன்றின் வெளிப்பாடு. அதில் எந்த போலித்தனமும் இல்லை.

“வெளிதல்” பாலியல் தொழிலாளி ஒருவரின் கதை. எத்தனையோ பாலியல் தொழிலாளி பற்றிய கதைகள் இருப்பினும் அதிலும் சில இடங்களில் அதன் ஆன்மாவை சரியாக உரசிச் சென்றதை உணர்ந்தேன். “மனநிழல்” எனும் கதையில் மனிதனின் அடிப்படை எண்ணமான சர்வைவல் என்ற ஒன்று எப்படியான குற்ற உணர்வை ஏற்படுத்தும் என்று அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். கலையின் சிறப்பே வெளிப்பாடு தானே. “இணைக் கோடு” கதையை அந்த உவமைகளோடு பொறுத்தி பார்க்க ஏதுவாக இருந்தது. வாசனை பச்சை நரம்பு கதைகள் எல்லோர் வாழ்விலும் இருக்கும். புனிதம் என்று சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட எல்லா உறவுகளை பற்றியும் இந்த தொகுப்பில் அதன் கட்டற்ற சுதந்திரத்தை அதனால் ஏற்படும் உளவியல் மனப்போராட்டங்களை பதிவு செய்திருக்கிறார். நானூறு ரியால் மட்டும் சிறிது சினிமாத்தனமாக தோன்றியது. நடக்கவே நடக்காது என்று சொல்லவில்லை. ஆனால் அதுவும் மறக்கமுடியாத ஒரு கதைதான். அந்த கதாபாத்திரம் பற்றிய முழுமையான ஒரு உளவியல் எனக்கு புரியாததால் கூட அப்படி தோன்றியிருக்கலாம். ஒருவேளை மனிதர்களின் கீழ்மைகளை, சுயநலத்தை சுட்டுகிறதோ என்னவோ. உறுப்பு எனும் கதையில் வரும் பாலியல் அத்துமீறல்களால் ஏற்படும் மனப்போராட்டம் அதன் தாக்கங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று.

அனோஜனின் அழகியல் ரசிக்கதக்கதாக இருந்தது. உவமைகள் பற்றி சொல்லும் போது “நட்சத்திரங்கள் சீவிய பென்சில் போலிருந்தது”என்று சிறுவர்களுக்கேயான பார்வையில் இருக்கும் நுட்பம் ரசிக்கலாம். நிறைய கதைகள் சிறுவர்களின் பார்வையிலேயே இருப்பது கதைக்கு நம்பகத்தன்மை அதிகரித்தது. மேலும் பெண்களை பார்க்கும் சிறுவர்களின் மனநிலையில் இருக்கும் அழகின் உட்புறம் படிந்திருக்கும் ஹார்மோன் கோளாறுகளை வெளிப்படுத்தும் விதமாக பட்டும் படாமலும்  சொல்லும் வர்ணிப்புகள் அழகாக  எழுதப்பட்டிருக்கிறது. ஈழப் போரின் கொடூரங்களை பாதிப்புகளை வலிந்து திணிக்காமல் போகிற போக்கில் எதார்த்தமாக இணைத்து எழுதியிருப்பது பிரக்ஞை பூர்வமான ஆசிரியனென வெளியிடப்பட்டுள்ளது. எழுத்து எனும் புதிரின் ஊடாக தனது தயக்கங்களை குழப்பங்களை மனப்போராட்டங்களை கடந்து சென்று விட துடிக்கும் துடிப்பு தெரிகிறது. பாலியல் கதைகளை தாண்டியும் அன்னோஜன் எழுத வேண்டும் என்பது எல்லோரையும் போலவே எனது விருப்பம். அவரும் அதை அடுத்து செய்வாரென நம்பலாம்.

அவரது முதல் தொகுப்பில் சில கதைகளையே இணையத்தில் வாசித்ததால் இந்த தொகுப்பில் அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி விகிதம் பற்றி ஆராய்ச்சி செய்யும் அறிவுஜீவித்தனமான வாய்ப்பு இல்லை என்பது மனநிறைவையே தருகிறது. மேலும் பல உயரங்களை தொடும் எழுத்தாளன் அனோஜன் பாலகிருஷ்னனுக்கு முத்தங்களும் வாழ்த்துகளும்.

கிழக்கு பதிப்பகம்.
விலை - ₹ 140.
அல்லதுwww.commonfolks.comஇணையதளத்தில் வாங்கிக் கொள்ளலாம்.

ஏப்ரல் 2018 பேசும் புதிய சக்தி இதழில் வெளியீடு 

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :