தேகம் - சாரு நிவேதிதா


இலக்கியத்தில் சுவாரஸ்ய போலிகளை கண்டறிதல் என்பது ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கு சற்று சவாலான விஷயம். சில ஜிகினாக்கல் கொண்டு எளிதாக ஏமாற்றிவிடும் விற்பன்னர்கள் அதிகம். தமிழில் இதற்கு உதாரணம் சாரு நிவேதிதா. அவரது தேகம் நாவலை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். அதிர்ச்சி தரும் விஷயங்களை அடிக்கிக்கொண்டே போவதும் பாலியல் வறட்சியை எழுத்தில் கொட்டுவதும் தான் அவரது தாரக மந்திரம். அதுவும் அவரது சொந்த பராக்கிரமத்தை பறை சாற்றும் வரிகளே அதிகம்.

கதை என்று ஒன்று இருக்காமல் எழுதுவது அசோகமித்திரன் ஸ்டைல். அதை அடியொற்றி எழுதும் சாருநிவேதிதா தன்னையும் அசோகமித்திரனாக நினைத்துக் கொள்வது அபத்ததிற்கே அபத்தமாகும். அசோகமித்திரன் கதைகளில் கதாபாத்திரங்களின் வளர்ச்சி இருக்கும். ஜிகினா பூசாத எழுத்துக்கள் அசோகமித்திரனுடையது. சாருவின் கதாபாத்திரங்களின் வளர்ச்சி என்ற ஒன்று இருக்கவே இருக்காது. அவரது டையரியை கிழித்து கிழித்து நாவல், கட்டுரை என்ற பெயரில் எழுதி வருகிறார். கட்டுரைகளை கூட மன்னித்து விடலாம். நாவலை கொச்சைப்படுத்தும் இந்த பாணியை என்னவென்று சொல்வது.


பத்தி எழுத்தாளர் என்பது எவ்வளவு பொருத்தம். வெங்காயத்தை உரிக்க உரிக்க சூன்யத்தை அடைந்த நிகழ்வாக தேகத்தை படித்தவர்களுக்கு ஒரு உபயோகமும் இல்லை. அன்பு பாசிசம் பற்றி சொல்லுகிறேன் என்ற பேர்வழியில் பிட் நோட்டீஸ் அடித்து கொண்டிருக்கிறார். பிட் நோட்டீஸ் இலக்கியம் ஆகுமா? அதுவும் காமத்தின் உளறல்கள் இலக்கியம் ஆகுமா? ஒரு பெண்ணுக்கு எழுதும் எஸ்எம்எஸ் போல இதெல்லாம் போலியான ஒன்று. அதை பத்தி பத்தியாக த்ரில்லர் எழுதுவது போல எழுதிவிட்டால் உலகத்தரமான நாவல் ஆகிவிடுமா?

ஆழ்மனம் வெளிப்படுவதே கலை. ஆழ்மனம் நேரடியாக வெளிப்படமுடியாதென்பதே கலையின் சவால். ஆகவேதான் அது குறிப்புணர்த்துகிறது. மறைமுகமாகச் சொல்கிறது. படிமங்களையும் அணிகளையும் பயன்படுத்துகிறது. சாரு தனது வாழ்க்கையை நியாயப்படுத்த எழுதுகிறாரா. அவரது பன்றி பிறந்த ஊர், அவரை விட்டு சென்ற மனைவி , சுன்னத் செய்த அவரது குறி, பத்து மணி நேரம் உடலுறவில் ஈடுபடும் ஆண்மை ( இதுவும் அவரது சாதனைகளில் ஒன்றாக அவரே சொல்கிறார்) அவரது குமாஸ்தா வேலை மற்றும் இன்னபிற சொந்த கதைகளையே இன்னும் எத்தனை நாட்களுக்கு இலக்கியம் என்ற பெயரில் டைப்படித்துக் கொண்டிருப்பார்.

நாவலில் கவிதை என்ற பெயரில் வருவதெல்லாம் “ புளியமரத்து அடியிலே புஸ்பலத்தா மடியிலே…” ரகம்தான். அதையெல்லாம் கவிதை என்பது எவ்வளவு கேவலமான ஒன்று. அப்புறம் ஜிகினாக்களின் பொதுவான குணமாக ஒன்றைப் பார்க்க முடியும். ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் முன்பு உபநிடதங்களையோ, விவிலியத்திலோ இன்னபிற புனித காவியங்களில் இருந்து ஒரு பாராகிராப் எழுதிவிடுவது. இதற்கும் அந்த அத்தியாயத்திற்கும் என்ன தொடர்பு என்றே யாரும் கேட்கக் கூடாது. அப்புறம் தான் என்னென்ன புத்தகங்களை படித்திருக்கிறேன் என்று பந்தா காட்டும் நிகழ்வுகளை பார்த்தவாறே இருக்கலாம். அதற்கும் நாவலுக்கும் என்ன சம்பந்தம்? அதெல்லாம் யோசிக்க கூடாது. படிக்க ஸ்வாரஸ்யமாக இருந்ததா அவ்வளவுதான்.



வாழ்க்கை என்பது குவியமில்லாத கட்டற்ற எல்லையைக் கொண்டுள்ளது. ஆனால் நாவல் முழுக்க முழுக்க வேறானது. நாவலுக்கு குவியம் வேண்டும். தேவையில்லாமல் இழுத்தடிக்க கூடாது. இந்த நாவல் இழுத்தடிப்பு வேலையைத்தான் செய்கிறது. தர்மா எனும் எழுத்தாளர் ( இதுவும் சாருவே) ஒரு பெண்ணை கெடுத்து அவளது முகத்தில் அமிலம் வீசிய கொடியவன் ஒருவனை கட்டிவைத்து சித்ரவதை செய்வதுதான் தொடக்கம். அதை சொல்லி விட்டு அந்த தர்மாவின் காதலிகள் உருகி உருகி தர்மாவுக்கு எழுதும் ஃபோர்ப்ளே எழுத்துக்களை நாவலின் இறுதிவரை உலவ விட்டிருக்கிறார். இந்தவகை எழுத்துக்களை Mind masturbation என்று குறிப்பிடுவது இங்கு சரியாக பொருந்துவதாக நினைக்கின்றேன்.

பாலியல் சுதந்திரம் குறித்து எழுதுவதாக தன்னை கட்டமைத்துக் கொள்ளும் சாருநிவேதிதாவின் எழுத்துக்களில் ஆழமே இல்லை. காமம் மனதைச் சார்ந்த விஷயம் என்று சொல்லும் இவரே தனக்கு அழகான யோனி வேண்டும் எப்போதுமே என்கிறார். என்ன வகையான முரண் இது? இந்த முரணை உடைத்துப் பார்த்தால் எது அவரது உண்மை என பளிச்சென்று தெரியும். அழகான யோனி தான் அவரது தேவை. காதல் காமம் என்பது ஆணோ பெண்ணோ அவர்களது உறுப்பில் இல்லை. அது அவரவர் தலைகளில் இருக்கிறது. யோனியில் விரல், வாய் வித்தைக்காட்டுவதாக தன்னையே புரோமோட் செய்து கொள்ளும் சாருவின் எழுத்துக்களுக்கும்  பிட் நோட்டீஸிலோ காமக்கதைகளிலோ வரும் எழுத்துகளுக்கோ பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லை.

காமமெனும் தூசி படர்ந்த வாழ்வெனும் நிலைக் கண்ணாடியை உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கும் சாருநிவேதிதாவிற்கு தூசியை துடைக்கும் துணியோ தண்ணீரோ தேவைப்படப்போவதில்லை. 

கிழக்கு பதிப்பகம். 
அமேசான் கிண்டலில் விலை ₹90. 

Comments

  1. பஸ் ஸ்டாண்டில வாய் பாத்து நின்னு இம்ப்ரெஸ் காட்டற வாண்டுங்க மாதிரி தான். பொம்பளைங்கள பிராகட் போடற இலக்கியம். அராத்து புராத்துங்க அப்படி தானே கூட்டம் போட்டுருக்கு?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?