டி20 கிரிக்கெட்டில் கொம்பன்..! ஆனால், டெஸ்ட்டுகளில்?





தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா அடுத்து 2-3 வருடங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் உலகை ஆளும் என்றே கணிக்கிறேன். மாறாக, டெஸ்ட் போட்டிகளில் மண்ணைக் கவ்வும். அதற்கான காரணங்களை பார்ப்போம். 

முதலும் முக்கியக் காரணமாக ஐபிஎல் தொடரைச் சொல்லலாம். தெரிந்தோ தெரியாமலோ பிசிசிஐ இதைக்கொண்டு வந்தது மிகப்பெரிய நல்லது. (பாதகமும் இருக்கிறது கடைசியில்) இந்தியாவில் எவ்வளவு திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு தொடராகவே ஐபிஎல் இருக்கிறது. இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக மட்டுமல்ல எல்லா இடங்களிலும் களமிறங்க பல பல வீரர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்தியா ஏ, பி, சி, டி என 4 அணிகளை உருவாக்கும் அளவுக்கு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதே நம்பமுடியாத உண்மை. 

தொடக்க வீரர்களுக்கு - ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக், சாம்சன், ருதுராஜ், இஷான் கிஷன், படிக்கல். 

3,4ஆம் இடத்துக்கு - சூர்ய குமார், ஷிவம் துபே,திலக் வர்மா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ், கே.எல்.ராகுல், துருவ் ஜூரேல், ஷஷாங் சிங், ரமன்தீப் சிங், சாய் சுதர்சன், ரஜத் படிதார். 

5,6,7ஆம் இடத்துக்கு - நிதிஷ், வாஷிங்டன், ஹார்திக், ரிக்கு சிங், வெங்கடேஷ் ஐயர், ரியான் பராக், ராகுல் திவேட்டியா, ஷாருக்கான், குர்ணல், ஷிதேஷ், பிரப்சிம்ரன், லோம்ரோர், ஸ்வப்னல் சிங். 

8ஆம் இடம்- சுழல் பந்தில் இந்திய அணி நல்ல தேர்வுகளை வைத்துள்ளது. வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னோய், சஹால், அஸ்வின், குல்தீப், மயங்க மார்கண்டே. 

9,10,11- இந்தியாவின் பலவீனம் என்றால் அது வேகப் பந்துவீச்சில்தான்.  

பும்ரா அளவுக்கு யாரையும் நம்பமுடியாது. மற்றவர்கள் ஒரு சில நேரத்தில் மட்டுமே சிறப்பாக வீசுவார்கள். அர்ஷ்தீப் சிங் தற்போது பும்ரா இடத்தில் இருக்கிறார். 

நாம் புவனேஷ்வர் குமார் மாதிரியான பௌலர்களை மிகவும் மிஸ் செய்கிறோம். தீபக் சஹார் புவனேஷ் மாதிரி ஆகலாம். ஆனால் அது அவர் கையில்தான் இருக்கிறது. பிசிசிஐ இந்த மாதிரி வீரர்களுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும். 

மயங்க யாதவ், உம்ரான் மாலிக் 150+ கி.மீ/ மணி வேகத்தில் பந்து வீசுகிறார்கள். ஆனால் கிரிக்கெட்டில் வேகம் மட்டுமே போதாது. லைன் & லென்த், வேறு வேறு மாதிரியான பந்துகளையும் வீச வேண்டும். இவர்களுக்கு தனி கவனம் செலுத்த ஒப்பந்தத்தில் இடம் தந்தமைக்கு பிசிசிஐ பாராட்ட வேண்டும். 

இந்திய அணியை வெல்ல இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற அணிகள் முயற்சிக்கும். அதிலும் இங்கிலாந்தில் வேகப் பந்து வீச்சாளர்கள் பெரிதாக சோபிக்காததால் அவர்களை பட்டியலில் இருந்து எடுத்து விடலாம்.

ஆஸி, பாகிஸ்தான் அணிகள் கலக்கி வருகிறார்கள். 3 விதமான கிரிக்கெட்டுக்கும் ஏற்ற அணிகளாக தற்போது இந்த இரண்டு அணிகள் மட்டுமே இருக்கின்றன. 

பாகிஸ்தான் கிரிக்கெட்டில் அரசியல் தலையிடாமல் இருந்து அவர்கள் உடல்நலத்தில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியாவைவிட அதிகமான கோப்பைகளை வென்றிருப்பார்கள்.

மண்ணைக் கவ்வும் நிலைமையில்...

டி20யில் இந்திய அணி உலகில் தலைநிமிர்ந்து நின்றாலும் ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் மண்ணைக் கவ்வும் என்பது துணிபு. கோபப்படாதீர்கள், இந்தியாவின் கவனம் முழுவதும் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே இருக்கிறது.

பணம், பேர் புகழ் ஒருசேர வருவதை யார்தான் வேண்டாம் என்பார்கள். அதனால், நாம் வீரர்களை குறைசொல்ல முடியாது. ஆனால், இந்திய அணியைத் தேர்வுசெய்யும் தேர்வர்கள், கேப்டன், பயிற்சியாளர்களை குறைசொல்லலாம்தானே? 

ஐபிஎல் நன்றாக விளையாடினால் ஒருநாள், டெஸ்ட் அணியில் எடுக்கிறார்கள். என்ன நியாயம் இது? ஐபிஎல் இருந்து ஒரு சிலரை மட்டும் டெஸ்ட்டில் முயற்சிக்கலாம். அதுவும் சேவாக், ஹெட், மேக்ஸ்வெல், ரிஷப் பந்த் மாதிரி மட்டுமே. மொத்த அணியையும் சேவாக் மாதிரியோ ரிஷப் பந்த் மாதிரியோ எடுக்கக் கூடாது. அது முற்றிலும் தவறான சிந்தனை. அதன் பலனாகவே சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் 0-3 என்ற வரலாற்று தோல்வி. 

இந்தத் தவறைத்தான் இந்திய அணி மீண்டும் மீண்டும் செய்து வருகிறது.

புஜாரா , அனுமா விஹாரி, ரஹானே போன்ற வீரர்களை இந்திய அணி புறக்கணிப்பது ஏன்? 5 வருடங்களாக கோலி 30க்கும் குறைவான சராசரி உடன் இந்திய அணியில் இருக்கிறார். ரோஹித் சர்மா இன்னும் ஐபிஎல் போட்டிகளில் இருந்தே வெளிவரவில்லை. 20-30 ரன்களில் நடையை கட்டுகிறார். ரசிகர்கள் அதிகம் இருப்பவர்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு வேறொரு நியாயமா?

ரஞ்சி கோப்பையில் உயிரைக் கொடுத்து எவ்வளவோ பேர் விளையாடுகிறார்கள். அவர்களை டெஸ்ட், ஒருநாள் அணிக்கு தேர்வு செய்ய முக்கியத்துவம் அளித்தால் டி20 போல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கொடி உயர பறக்கும்! இல்லையேல் டி20யில் மட்டுமே பறந்து மற்ற போட்டிகளில் கம்பம் மட்டுமே இருக்கும். 

கால்பந்தில் பிரேசிலின் கேப்டனும் கடந்த வருடம் உலகக் கோப்பையில் தங்கக் காலணி வென்றவருமான கிளியன் எம்பாப்பேவை சரியாக ஆடவில்லை என்று அணியில் எடுக்காமல் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் பிரேசில் அணி விளையாடுகிறது. 

இதையல்லவா நாம் கற்க வேண்டும். என்ன இருந்தாலும் கால்பந்துதானே விளையாட்டுக்கு முன்னோடி. தற்போது , கால்பந்து போலவேதான் கிரிக்கெட்டும் கிளப் போட்டிகளை ஆரம்பித்து வருகிறது. ஆனால் கால்பந்தில் கிரிக்கெட் அளவுக்கு 3 விதமான போட்டிகள் இல்லை என்பதால் அங்கு பிரச்னைகள் குறைவு. 

தற்போது கொம்பனாக இருந்தாலும் 2,3 வருடங்களில் டி20 கிரிக்கெட்டிலும் அடிவாங்கும் நிலைமை இந்தியாவுக்குவர அதிகமான வாய்ப்பிருக்கிறது. 

உலகமே டி20 கிரிக்கெட்டுக்கு பழகிவருகிறது. கனடா, ஆப்கானிஸ்தான் அணிகள் சுவாரசியமாக விளையாடுகின்றன. புதுமைகளும் அதே நேரத்தில் தொலைநோக்கு பார்வையுடன் சரியான தேர்வுகளும் இல்லாவிட்டால் எந்தவொரு அணியும் நிர்வாகமும் (பிசிசிஐயும் ஒரு தனியார் நிறுவனம்தானே) காலப்போக்கில் அழிந்துபோகும் என்பது உலக வழக்கம்..!

Comments

Popular posts from this blog

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?

தேவதேவனும் ஜென் கவிதைகளும்