வைகாசி -2 :



வேலூர் மாவட்டத்திலே குடியாத்தம் கங்கையம்மன் திருவிழா என்றால் பிரசித்தம். அல்லது பிரசித்தமாக நாங்களே கூட நினைத்துக் கொள்ளலாம். எங்களை சுற்றி உள்ள ஊர்களிலே இங்கு தான் மிகப்பெரிய திருவிழா நடைபெறும். இது நடப்பது ஒவ்வொரு வருடமும் வைகாசி ஒன்றாம் தேதி. மே மாதத்தில் வரும். பெரும்பாலும் திருவிழா நடத்தும் ஊர்கள் ஆங்கில தேதிகளை உபயோகிப்பது இல்லை. திருவிழாவிற்கு மட்டும் தமிழ் தேதி. மற்ற உலகியல் சார்ந்த எல்லா விஷயங்களிலும் ஆங்கில தேதி தான்.


வைகாசி இரண்டாம் நாள் என்பதால் Convenient காக எனது அம்மா ஒவ்வொரு வருடமும் குடியாத்தம் திருவிழா அடுத்து எனது பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்வது வழக்கம். பின்பு அதுவே வழக்கமாகியது. லீப் வருடம் வருவதால் ஆங்கில தேதியை பயன்படுத்துவது இல்லை. ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளைக்கு முன்பாகவோ அல்லது அடுத்த நாளைக்கோ வாழ்த்துகள் சொல்லும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நானும் ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லி வந்தேன். பின்னர் யார் எப்போது வாழ்த்து சொன்னாலும் நன்றி என்று சொல்லி வைத்து விடுவேன்.

இதுபோன்ற அற்ப காரணங்களால் யாரும் எனக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஏனெனில் யாருக்கும் எனது பிறந்த நாள் தெரியாது. பள்ளி நண்பர்களில் அசோக் என்பவன் மட்டுமே எல்லாவற்றையும் நியாபகம் வைத்துக் கொள்ளுவான். அவனுக்கே கூட தேதி குழப்பம் என சொல்லி இருந்தான். இன்று கூட அவன் வாட்ஸப் குரூப்பில் வைக்காவிட்டால் அந்த சம்ப்ராதாயமான 10 வாழ்த்துகள் கூட வந்திருக்காது. கல்லூரியில் எனக்கென்று ஒரு கேங்கெல்லாம் இல்லை. ஒரு பெரிய கேங்கில் சின்னஞ்சிறு ஆள். அவர்கள் கூட எனது பிறந்த நாளை மறந்து விடுவார்கள். அந்த புறக்கணிப்புகளில் கூட எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் அவனுங்களுக்கு சரக்கு வாங்கித் தர அப்பொழுது காசு திரட்ட முடியாது.  பொதுவாக  பிறந்த நாளை கொண்டாடும் பழக்கம்/ ஈடுபாடு இருந்ததில்லை. அல்லது தெரியவில்லை என்று சொல்லலாம். இருந்தாலும் உள்ளூற ஏதோ இருக்குமோ என்னவோ தெரியவில்லை.

அம்மா உட்பட எல்லோருமே இந்த நாளை மறந்து விட்டார்கள். நாளில் ஏதாவது இருக்கிறதா? அவர்களுக்கு நினைவு வைத்துக் கொள்ள ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கிறது. தப்பில்லை. கடினமான அல்ஜூப்ரா சூத்திரங்களை நினைவில் வைத்திருக்கும் அண்ணாவுக்கு கூட தெரியாது. தமிழ் தேதியை பயன்படுத்தாது எவருக்குமே கடினம் தான். எப்போதுமே கடவுள் துகள் போல எனது தங்கை மட்டுமே சரியாக நியாபகம் வைத்து வாழ்த்து சொல்லுவாள். அவள் சொல்லாவிட்டாலும் அவளுக்கு நினைவு இருக்கும் என்பது தெரியும். ஆனால் எல்லா வருட பிறந்த நாள் அன்றும் நாங்கள் பேசிக் கொள்வதில்லை. அது எப்போதும் நடக்கும் ஈகோ மாதந்தோறும் நிகழும் வெற்றுச் சண்டை. அவள் தான் ஊரில் உள்ள எல்லோருக்கும் தகவல் சொல்லுவாள். இன்னும் எத்தனை வருடம் இதை அவள் தொடர்ந்து நினைவில் வைத்திரு முடியும்? இதெல்லாம் ஒரு விஷயமா? இல்லை என்றாலும் பரவாயில்லை.

சரி. மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த நாள். அப்போதைக்கு கடவுள் துகளாக இருந்தவள். ஒரு தோழி சர்பரைஸாக கேக் அனுப்பி இருந்தாள். அதில் எழுதியிருப்பதற்கான சில வார்த்தைகள் எங்களிருவருக்கமான  அந்தரங்கமான விஷயம். போகட்டும் அந்த கேக் செம்மத்தியான டேஸ்ட். அதுவரை அந்த மாதிரி சாப்பிட்டதே இல்லை.  கேக் உடன் ஒரு பர்ஸை எல்லாம் சேர்த்து எனது நண்பனிடம் கொடுத்து அனுப்பி இருந்தாள். வாழ்க்கையில் முதல் பிறந்த நாள் கொண்டாட்டம் அதுதான். அதற்குள்ளாக எல்லாமே மாறிவிட்டது. இப்போது அவர்களும் மறந்து விட்டார்கள் போல. யாரும் தொடர்பு கொள்ளவில்லை. காலம் துன்பத்தின் கூர்மையை இழந்து விடுகிறது என அசோகமித்திரன் எழுதியது நினைவுக்கு வருகிறது.


Coco என்றொரு அனிமேஷன் திரைப்படம். அதில் ஒரு லாஜிக் வரும். அது என்னை மிகவும் கவர்ந்தது. இறந்தவரின்  நினைவு உள்ளவர்களாக  பூமியில் ஒருத்தராவது இருக்கும் வரை அவர்களது ஆன்மா சொர்கத்தில் அழியாமல் இருக்கும். ஒருவர் கூட இறந்தவரை பற்றி நினைக்காவிடில் ஆன்மா அழிந்து விடும். இது எவ்வளவு அபத்தமாக இருந்தாலும் ஏனோ என்னை மிகவும் கவர்ந்தது.

இதையெல்லாம் ஏன் இங்கு தொடர்பு படுத்தி எழுத வேண்டும். அவள் என்றைக்காவது வாசிப்பாளென்றா?  பெருமை பீத்தலா? சிம்பதியா? அடச்சீ.  இல்லை எக்ஸிஸ்ஸென்டலிஸம் அப்படி வேறெதாவதா? எதுவாக நினைக்கிறீர்களோ அதுவாகவே முடிவாகட்டும். 

Comments

  1. உங்களுடைய 'அவள்' மீண்டும் உங்களை நினைவுகூர்ந்து வாழ்த்த வாழ்த்துகிறேன்.


























































































    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :