கலையும் கொலையும் அதனுடன் பா.ரஞ்சித் எனும் கலைஞனும் :




கிரிக்கெட் விளையாடும் போது எப்படியோ புதிய ஷார்ட்ஸ் ஒன்றின் அடியில் லேசாக தையல் பிரிந்திருந்தது. டெய்லரிடம் சென்றால் பத்து ரூபாயில் முடிந்து விடும். ஆனால் சோம்பேறித்தனம். அதற்கு பதிலாக நானே ஊசி நூலைக் கொண்டு தைக்க முடிவெடுத்தேன். ஊசி நூலைத் தொட்டதெல்லாம் பால்யத்தில் தான். இப்போது உபயோகிக்கும் போது பழைய நினைவுகள் வந்தது. போகட்டும். கூடவே ஒரு கொரியன் படமும் நியாபகம் வந்தது. The way home. 




அதில் கடைசியாக அந்த சிறுவன் தனது பாட்டிக்காக நிறைய ஊசி-நூலைக் கோர்த்து விட்டு போவான். அந்த காட்சி இன்றளவும் என்னை உலுக்கக்கூடியது. ஒரு ஃபிரேமில் அன்பின் ஆழத்தை காட்ட முடியும் என்பதெல்லாம் சாத்தியம். இந்த படத்தில் எந்த வித ரொமான்டிஸமும் இல்லை என்பது தான் தனிச்சிறப்பு. அவ்வளவு சீக்கிரத்தில் அழமாட்டேன். ஆனால் இந்த காட்சி நினைவுக்கு வரும்போதெல்லாம் எனக்கு கண்ணீரை கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடுகிறது. இதன் திரைக்கதையை மட்டுமல்ல அந்த நடிகர்களையும்  பாராட்டாமல் இருக்க முடியாது. பெரிய பெரிய தத்துவத்தை விட  எளிதான  ஒன்றை வெளிக்கொணர்வது தானே சிரமம். அதில் தானே கலை ஒளிந்துகொண்டு விளையாடுகிறது.

கலை என்பது மறைந்து நின்று தாக்கும். பிரச்சாரம் செய்யாது. அது ஒருவனது அடி ஆழத்தில் அவனையே அறியாமல் subconscious mindல் பதிந்து விடும். மேலே சொன்ன படம் கூட அப்படித்தான். கலை ஏன் மறைந்திருந்து தாக்க வேண்டும் என்றால் நேரடியாக தாக்குவதற்கு நியூஸ் சோனலோ பிட்டு நோடிஸோ மேடைப் பிரச்சாரமோ போதுமே. அது மேலேட்டமானது. மாஸ்டர்பேஷன் மாதிரி முடிந்ததும் அதன் வீரியம் குறைந்து விடும். 




மலையாளப் படங்களை  விரும்பி பார்ப்பேன். 2016ல் வெளிவந்த ஓலப்பீப்பி என்றொரு படம் உண்டு. டிரெய்லர் பார்த்து the way home மாதிரி இருக்குமோ என்று பார்த்தேன். அது நில உரிமை சம்பந்தப்பட்ட படம். இதிலும் பாட்டி - பேரன் உறவுக் காட்சிகள் அதிகம் வருகிறது. படம் நெடுகிலும் மெலோ டிராமா தூக்கலாக இருந்தது. பார்க்கவே அபத்தமாக இருந்தது. ஏதோ சீரியல் பார்த்த உணர்வு. கலைப் படைப்புக்கும் நொல்லைப் படைப்புக்கும் உள்ள வித்தியாசங்களை இந்த இரண்டு படங்களை பார்த்து புரிந்து கொள்ளலாம்.

***
ரஞ்சித் எனும் கலைஞன் :

எங்களூரில் ஒரு பையன் இருக்கிறான். அவன் ஆதிக்க சாதியினை சார்ந்தவன். அதற்கேற்றாற் போல மாட்டுக் கறி என்றாலே ஆகாது. ஆனால் அவனுக்கு கூட அட்டகத்தி படம் பிடிக்கும். அட்டக்கத்தி படம் முழுக்க முழுக்க கலைப் படம். சில சமரசங்கள் பாடலாக அமைந்துள்ளது. ஆனால் அந்த பாடலே கூட கலையாக இருக்கிறது என்பது தான் சிறப்பு. அந்தப் பையனையே அறியாமல், “சேர்ந்து வாழும் காலம் அடிக்கவா மாட்டு தோலு மேளம் 
வாயேண்டி கேடி நீ இல்ல ஜோடி வால் இல்லா காத்தாடி ” என்று பாடிக் கொண்டே இருப்பான். இதுதான் கலையின் வேலை. ஒருவனது சப்கான்ஸியஸில் புகுந்து அவனையறியாமலே மாற்றத்தை கொடுக்கும். இருப்பினும் சில பாடல்களை தவிர்த்து விட்டு பார்த்தால் அது அதன் வேலையை கச்சிதமாக செய்கிறது. 




காதல் என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் ஒரு பெரும் அலங்கார கோட்டையே கட்டி எழுப்பப்பட்டுள்ளது நமது தமிழ் சினிமாவால். அதை உடைத்தெறியும் படமென்றால் அது அட்டக்கத்தி தான். ஆனால் அதை உள்வாங்கியவர்கள் எத்தனை பேரென்றெல்லாம் தெரியாது. அப்புறம் தலித் மக்களை பற்றி வருவதெல்லாம் வாழ்வியலின் ஊடாக வரும் அரசியலே. இதில் முக்கியமாக இதையெல்லாம் மைக் செட் போட்டு கூவவில்லை. அதாவது பிரச்சாரம் இருக்கவே இருக்காது. நகைச்சுவையின் உதவியுடன் தான் சொல்ல வந்த எல்லா விஷயத்தையும் பிசிறில்லாமல் பா. இரஞ்சித்தால் காட்சிப் படுத்த முடிந்திருக்கிறது. இதுதான் கலை. இதை எல்லோரும் புரிந்து கொள்வார்களா என்றால் அது வெள்ளத்தனைய மலர் நீட்டம்.


“கலைத் திறனற்றவர்கள் தமது வறுமையை மறுக்கவும் இலகுவில் பாட்டாளி வர்க்க மக்களின் கருத்தை கவரவும் சுலேகங்களில் தமக்குள்ள பிடிப்பை வெளியுலகுக்கு காட்டவும் முற்படுவர்”.

~ ஏங்கல்ஸ்


காலா படத்தில் பிரச்சாரம் தூக்கலாக இருப்பதை பாடல்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பாட்டாளி வர்க்க மக்களை எளிதில் கவரும் பல உணர்ச்சி தூண்டல்களை பாடலில் கேட்கலாம். சந்தோஷ் நாராயணன் கூட நீர்த்து போய்விட்டார். அது வேறு டிபார்ட்மெண்ட்.  இருப்பினும் படம் வெளியான பிறகே எதுவும் சொல்ல முடியும். பா.ரஞ்சித்க்கு கலைத் திறன் இருக்கிறது என்பதற்கு அட்டகத்தி ஒன்றே போதும். அதிலிருந்து முன்னேற்றம் அடைந்து  ஃபான்றி, ஒளிவுதிவசத்தே களி போல வேற லெவலில் எடுக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும். மெட்ராஸ் படம் கூட தரமான கமர்ஷியல் படம் எனலாம். தமிழ் சினிமா பற்றி எல்லோருக்கும் தெரியும். சர்வைவல் வேண்டி கமர்ஷியல் எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை வந்துவிட்டால் குறைந்த பட்சம் மெட்ராஸ் படத்தை ஒரு பென்ஞ்மார்க்காக வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் மெட்ராஸில் பிரச்சாரம் குறைவு. கபாலியிலே அதிகமாக கமர்ஷியல் சேர்ந்து பிரச்சாரம் பீறிட்டது. போக போக தேய்ந்து போக ஆரம்பித்து விட்டாரோ. ஆனால் இங்கு வெளிவரும் குப்பை கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் இது பரவாயில்லை என்ற பெயரில் ரசிக்கலாம். ரஞ்சித்தின் பேச்செல்லாம் சரி படத்தில்? பணத்துக்காக ஜிகினா பூசிவிட்டு கமர்ஷியல் படமென்று தப்பிப்பது கலைஞனுக்கு அழகில்லை. காலா கலையா கொலையா என்பதை வெளிவந்த பிறகே தெரியும்.

பா.ரஞ்சித்துக்கு இரண்டு பக்கமும் எதிரிகள் இருக்கிறார்கள். ஒன்று ஆதிக்க சாதியினர். இன்னொன்று ஒடுக்கப்பட்ட சாதியினர். முதல் குழுவினர் வைக்கும் விவாதங்களை தூசி போல கடந்து விடலாம். அதாவது பா.ரஞ்சித் எடுப்பதும் சாதி வெறிப் படமே என்பது அவர்களது கருத்து. எனக்கு தெரிந்த வரை ரஞ்சித் அப்படிப்பட்ட ஆளில்லை. இதற்கு உதாரணமாக இந்த நேர்காணலை பார்க்கலாம். https://youtu.be/zSAAfKi3AIQ.  குறிப்பாக 22வது நிமிடத்தை பலமுறை பார்க்கலாம். /ஒடுக்கப்பட்ட மக்கள் கூட அதிகாரத்தில் வந்த பிறகு அவர்கள் தங்களுக்கு கீழே உள்ளவர்களை எப்படி பார்ப்பார்கள் என்று உள்ளது. அதிகாரம் எவனுக்கு கெடைச்சாலுமே அடுத்தவனை ஒடுக்குவது நடக்கும்.../ இவ்வளவு சென்சிபிலான ஆளை தலித் சினிமா போராளி என்ற லேபிளில் அடைப்பது எவ்வளவு கீழ்மையானது. அவரது தளம் விரிவானது. யாரெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ அதையெல்லாம் பேசத்துணிபவர். பேச்செல்லாம் குறைச்சல் இல்லை. படத்தில் இருப்பது தானே முக்கியம். 




ரெண்டாவது குழுவினர் சற்று விசித்திரமானவர்கள். அதாவது பொலிடிகல் கரக்டனஸோடு ரஞ்சித்தை வம்புக்கு இழுப்போர்கள். படத்தில் பேசும் அரசியலையும் நிஜத்தில் அவரது சொகுசு வாழ்வையும் தொடர்பு படுத்தி பேசுவது. ரஞ்சித் முடிந்த அளவுக்கு நீலம் என்ற பெயரில் செய்வதை யாவரும் அறிந்ததே. ரஞ்சித் உழைக்கிறார். பணம் பெருகிறார். அதனூடாக தனது வாழ்வையும் தான் நம்பும் விசயங்களையும் செய்கிறார். இருப்பினும் ரஞ்சித்தின் முன்னேற்றம் அவர்களுக்கு வயித்தெரிச்சலை கொடுத்திருக்கலாம்.

மூன்றாவதாக ஒரு குழு உள்ளது. ரசிகர்கள் எனும் பேஸ்புக் போராளிகள். அதாவது ரஞ்சித் எதை எடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆஹா ஓஹோ போடுவது. ரஜினி கடிகாரத்தில் சிறிய முள் பெரிய முள் வருவது ஏற்றத்-தாழ்வு குறியீடு என்று அளந்து விடுவார்கள். முதல் இரண்டு குழுவை விட இவர்கள் பேராபாத்தானவர்கள். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும் உடனிருக்க வேண்டிய நேரத்தில் உடனிருப்பதுமே ரசிகர்கள். கமர்ஷியல் குழியில் அமிழ்ந்து விடாமல் இருக்க ரஞ்சித் கவனமாக இருக்க வேண்டும்.

கலையின் மூலமாக அரசியலை சொல்வதில் தவறே இல்லை. ஆனால் அது கலையாக இருக்கிறதா பிரச்சாரமாக இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்.. இல்லையெனில் அது எந்தவித பயனுமின்றி 200 கோடியோ 300 கோடியோ வசூல் ஈட்டிய வழமையான தமிழ் சினிமா எனும் கழிவுநீரில் கலந்து விடும். 

Comments

  1. நீங்கள் அனைத்தையும் ஆழமாக உற்று நோக்கி தெளிவாக உணர்பவராக இருக்கிறீர்கள்.




























































































    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :