ஆன்மாவைத் தேடி… !





“முன்னேற வழிகளைத்
தேடிய போது
என்னைத் தொலைத்து விட்டேன்
இப்போது
என்னை மீண்டும்
தேடுகிறேன்
முன்னேற்றங்கள்
தொலையத் தொடங்கி விட்டன”.


~ தமிழன்பன்.

தமிழன்பனின் கவிதைகள் மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால் அது உள்ளடக்கத்தினாலும் வடிவ அமைப்பு ரீதியாகவும் கலைப்படைப்பு என்பதில் ஐயமில்லை.

தமிழன்பன்



மேற்குறிப்பிட்ட கவிதையில் முன்னேற்றம் என்பது materialistic வாழ்வை குறிக்கிறது. வள்ளுவன் சொல்லும் “பொருளிள்ளாற்கு இவ்வுலகம் இல்லை” என்பதுதான் இது. கவிதையில் வரும் இன்னொரு முன்னேற்றம் என்பது ஆன்மாவைக் குறிக்கிறது.

பொதுவாக எல்லோரும் சொல்வது போல இந்த நடுத்தர வர்க்கத்தின் யுவன் யுவதிகளுக்கு இந்த அலைச்சல் ஏற்படுவது இயல்பே. அதுவும் எழுத்து சார் துறையில் ஆர்வம் இருந்து வாழ்வை தொலைத்தவர்களின் கதை பாரதி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா என்று இப்பொழுது வரைக்கும் நீண்டுகொண்டே உள்ளது. நீண்டுகொண்டே இருக்கும். எதுவரை என்று சொல்ல முடியாது. வேறெதாவது என்றாலும் ஓரளவுக்கு நல்ல வாழ்க்கை அமையும் துறைகள் இருக்கிறது. அதில் உங்கள் ஆன்மாவை தொலைக்க தேவையில்லை. சரிக்கு சமம் பொருள் கிடைத்து விடும்.

சரி போகட்டும். மேலே உள்ள கவிதையில் தேடு, தொலை என்று வருவது முதலில் 3 அடி வருவது புறப்பொருளின் (பணம்) வெற்றியை சொல்லுகிறது. ஆன்மாவின் தோல்வியை சொல்லுகிறது.  பின்னர் வரும் தேடு, தொலையில் அகப்பொருளின் (ஆன்மா) வெற்றியை சொல்லுகிறது. பணத்தின் தோல்வியை சொல்லுகிறது. இது 5அடியில் வரும். 3 அடியில் இருந்து 5 அடிக்கு ஏன் நீள வேண்டும்! பின்னதையும் அதே 3 அடியில் சொல்லியிருக்கலாம் அல்லவா? இங்கு தான் சாதாரண Enter பட்டனை தட்டித் தட்டி எழுதும் குப்பை எழுத்துக்காரனுக்கும் கலைஞருக்கும் வித்தியாசம் இருக்கிறது.

கலையில் பிரச்சாரம் கூடாது இல்லையா. மேலே உள்ள கவிதையில் எந்தப் பிரச்சாரமும் இல்லை. உள்ளதை உள்ளபடியே சொல்லியிருக்கிறார். ஆனால்! இந்த ஆனால் தான் முக்கியம். அந்த 3 அடியில் இருந்து 5 அடிக்கு மாறிய தாவல் தான் குறிப்பு. மூன்றிலிருந்து ஐந்துக்கு விரிவதன் மூலம் தான் எதை அழுத்தமாக முன்வைக்கிறேன் என்பதை குறிப்பால் உணர்த்துகிறார். அதாவது மெட்டீரியலிஸ்டிக் வாழ்வை விட தனது ஆன்மாவை தேடும் வாழ்கையே சிறந்தது என்று குறிப்பால் உணர்த்துகிறார். 

இது போல நிறைய ஆராய்ச்சி கட்டுரைகளை செ.வை.சண்முகம் கவிதைக் கட்டமைப்பு (2003, நியூசென்சுரி புக் ஹவுஸ்) நூலில் எழுதியுள்ளார். மேலே எழுதியதில் கூட அவரின் வழிகாட்டுதலே பிரதானமான ஒன்றாகும். இப்படி கவிதைகளைப் பற்றி புரிந்து கொள்ளும் திறப்புகளை ஏற்படுத்துகிறார். 


 
செ.வை.சண்முகம்


இந்த நூலில் மொழியில் இலக்கியத் திறனாய்வும் , செயல்முறை இலக்கிய திறனாய்வும் சேர்ந்து, பெரும்பான்மையும் தனிப்பாடல்களின் கட்டமைப்பும் ஆராயும் கட்டுரைகள் அடங்கியுள்ளன. 


இந்த தொகுப்பின் அட்டகாசமான கட்டுரைகளென “திருப்பாவை கட்டமைப்பு” , “பாரதி- கண்ணம்மா என் காதலி:அமைப்பியல் நோக்கு”, “தமிழன்பன் கவிதைகள்: மொழி ஆளுமை” அப்புறம் கவிதைக் கட்டமைப்பு. இதில் பெரும்பாலும் சங்க இலக்கியங்களைப் பற்றியே வருவதாலும் மேலும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தேவைப்படும் திறனாய்வு நூல் போல ஏகப்பட்ட பாடல்களின் தகவலையும் படிப்பதற்கு சற்று அயற்சியாக இருக்கும். மேலும் இலக்கணங்கள் யாப்பு என்று கிறங்கடிக்கவும் செய்கிறது. சங்க இலக்கியங்களில் ஆர்வம் உள்ளவர்களும் அதைப் படித்தவர்களும் தப்பித்து விடலாம். இல்லையேல் மிகவும் கடினம்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

மீண்டும் மீண்டும் சங்க கால இலக்கியங்களை ஏன் வாசிக்க வேண்டும் என்று சிறுபிள்ளை தனமாக கேட்கக் கூடாது. வரலாறு இன்றி நிகழ்காலமும் இல்லை, எதிர் காலமும் இல்லை.

இதை மொத்தமும் சரியாக படித்து புரிந்து செரித்து விட்டால் மோஸ்தராகிவிடலாம் என்பது என் கணிப்பு.

நூலின் பெயர் - கவிதைக் கட்டமைப்பு.             பதிப்பகம் - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.                 விலை -₹225. 

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :