இலக்கியத்திலிருந்து சினிமா :
தலைப்பே சுவாரஸ்யமான ஒன்று. இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அன்பும் நன்றியும். இதைப்பற்றி திரைக்கதை எழுத்தாளர் எம் கே மணி அவர்கள் பேசிய வீடியோ முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன். அதைப்பற்றி சில வார்த்தைகள்.
பேச்சை ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. நல்ல தொடக்கம் பாதி வெற்றி என சொல்லுவார்களே அது தெரிந்தது. இலக்கியத்தில் இருந்து சினிமா வந்தது சரியா தவறா? இலக்கியத்தில் இருந்து சினிமா சரியாக வந்திருக்கிறதா வரவில்லையா என்பதை பட்டிமன்றம் மாதிரி இல்லாமல் அதனதன் நியாயமான பக்கத்தில் இருந்து பேசுகிறேன் என்று சொன்ன புள்ளியே கவர்ந்தது. அதை சரியாகவும் பேசி முடித்தார்.
தமிழ் சினிமாவில் இலக்கியம் எப்படி இருக்கிறது? அதற்கிடையே எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை நியாயமான முறையில் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். இலக்கிய பரீட்சையும் உலக சினிமா பரீட்சையும் அத்துடன் தமிழ் சினிமாவில் நிஜமான உள்ளரசியல் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்துமே எம் கே மணி இதற்கு சரியான ஆள். மற்றவர்கள் யாரேனும் இருந்தாலுமே ஏதேனும் ஒன்றில் ஒருபக்க சார்புடையவர்களாக இருப்பார்கள். மணி ஸார் இரண்டிலும் balanced ஒரு ஆள். அது அவ்வளவு எளிதானதல்ல என்பது என் சொந்த அனுபவம். தமிழிலக்கியத்தை தீவிரமாக படிப்பவர்களிடம் சினிமா சற்று தள்ளியே நிற்கிறது. சினிமா தமிழ் எழுத்துக்காரனை அழித்து விடுவதாக நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறான பார்வையாகும். சுரணையுள்ள வாசகன் எப்படி கலையை ஏழுகடல் ஏழுமலைத்தாண்டி வைத்திருந்தாலும் கண்டுகொள்வானோ அப்படி சுரணையுள்ள திரை எழுத்தாளன் இரண்டிலும் சரியான நிலைப்பாட்டில் இருப்பான். இது ஏதோ தனிமனித துதி அல்ல. எனது தீவிர கண்காணிப்பில் இருந்து சொல்வது தான். அதை இனிவரும் காலங்களில் உணர்வீர்கள்.
நான் உலக சினிமா அளவிற்கு இணையாக மலையாள படங்களை விரும்பி பார்ப்பேன். இமயம் வளர்ந்து வரும் பிரமிப்பை தொடர்ந்து அவதானிப்பது வெறும் களிப்பு மட்டுமேவா! தற்கால மலையாள சினிமா தற்கால மலையாள இலக்கியத்தை முந்துகிறது என்று மணி பேசினார். இதை அவ்வளவு எளிதாக சொல்லி விட முடியுமா! அதற்கான வாசிப்பு தொடர் அவதானிப்புகள் எல்லாம் பிரமிக்கதக்கவை. இவர் மலையாளக் கிளாசிக் என்று ஒரு தொடர் எழுதி வருகிறார். சினிமா விகடனில். விகடனுக்கே ஏற்ற பொழுதுபோக்கு அம்சத்துடன் கலை எங்கு வெற்றி பெருகிறது அது திரைக்கதையாக எங்கு வெற்றி பெருகிறது என்று நுட்பத்தையும் முனை மழுங்காத வார்த்தைகளில் வாரம் வாரம் புதன்கிழமை தொடராக எழுதிக் கொண்டு வருகிறார். அதற்கான இணைப்பு.
அவர் ஒரு சிறுகதை தொகுப்பையும் எழுதியுள்ளார். அதில் அந்த மொழியை கொண்டு மட்டுமே நிராகரிக்கும் இலக்கிய போக்கை எதிர்க்கிறேன். அந்த மொழியை தாண்டி அது கலையாகும் தருணங்கள் இருக்கிறது. சினிமா தொடர்பான ஒரு புத்தகமும் விரைவில் வர இருக்கிறது. தலைப்பு - வேறு சில ஆட்கள். நிச்சயமாக இதுவும் தனிமனித துதியில் சேராது என்பது அந்த புத்தகம் வந்ததும் தெரிந்து கொள்வீர்கள்.
தமிழ் திரை எழுத்து பற்றியோ இலக்கியம் பற்றியோ பேசும்போது ஜெயமோகன் இடம்பெருவது தவிர்க்க இயலாதது. தமிழில் எழுத்தாளர்களை சட்டை தைக்க தான் கூப்பிடுகிறார்கள் என்று சொன்ன மணி அவர்களின் வரிகளில் இருப்பது வெறும் ஜோக்கு மட்டுமா? ஏழாம் உலகம்- நான் கடவுள் படத்தில் நிகழ்ந்தது பற்றி அருமையாக சொன்னார். இதையெல்லாம் கூட இல்லாவிட்டால் ஜெயமோகனுக்கு Ozhimuri படம் இருக்கிறது.
விஷ்ணு புரம் நாவல் ஒரு அதிபுனைவு என்கிறார். நான் அந்த நாவலை இன்னும் வாசிக்காததால் ஏதும் சொல்லவதற்கில்லை. ஆனால் மணி சொல்லும் அந்த கூறு பிடிபடுகிறது. ஒரு திரைக்கதை எழுத்துக்காரனுக்கு வேண்டிய நுட்பங்கள் அதில் கிடைப்பதாக சொல்கிறார். ஆனால் வெறுமனே ஜெயமோகனை பிஜேபி இந்துத்துவா கைக்கூலி என்று மொண்ணைத்தனமான கூட்டம் புறக்கணிப்பது பரிதாபமாக இருக்கிறது. மணி சொல்வது போல தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு சவால் விடும் நெஞ்சுரம் இருக்கிறது என்பதில் இலக்கிய வாசகன் எவனுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. ஆனால் தமிழ் சினிமா பல வருடங்கள் பின்தங்கியே இருக்கிறது. தமிழில் செய்யப்பட்ட இலக்கியத்தில் இருந்து சினிமா பற்றிய முயற்சிகள் அது பற்றி பேசியதும் முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன்.
இலக்கியத்தில் இருந்து சினிமா வெற்றி பெற copy paste வேலைக்கு ஆகாது. மறு ஆக்கங்கள் தேவை. அது இலக்கியம் படிப்பதன் மூலமாக ஒரு மனப்பழக்கமாகவே வரும் என்பதுதான் இந்த வீடியோவின் ஒட்டுமொத்த சாரம். அதை தொடங்கி சரியாகவே முடித்தும் இருக்கிறார். அந்த வீடியோ முழு உரையையும் காண யூடியூப் இணைப்பு
Best adopted screenplay award ஊட்டி குறும்பட திருவிழாவில் அசோகமித்திரன் சிறுகதை ஒன்றை தழுவி இவரால் எழுதப்பட்ட "கடன்" என்ற குறும்படத்திற்காக கிடைத்தது. மேலும் சில திரைப்பட விழாவில் விருது வாங்கிய இன்னும் வெளிவராத "சிகை" படத்திலும் எழுதி இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். வெறுமனே வாய்பேச்சு அல்ல என்பதையும் புரிந்து கொள்ளலாம். இவரை தொடர்ந்து முன்னிருத்தி வருவதற்கான ஒரே காரணம் அவர் ஒரு கலைஞன் அவ்வளவு தான்.
Comments
Post a Comment