சிறுபான்மை எனும் மூடத்தனம் :




பெரும்பான்மைக்கு எதிராக குதிக்கும் சிறுபான்மையில் இருக்கும் அதிகாரத்தை யாரும் எதிர்த்து பேசுவதில்லை. அதிலுருக்கும் குறைகளை தெரிந்துமே கூட வாயைத் திறந்து பேசுவதில்லை. இதை முன்னிருத்தி பேசுவதே கூட தேசத்துரோகத்தை விட குற்றமாக கருதப்படுகிறது. இல்லை  இல்லை தேசத்துரோகம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து போயிற்று. அநியாயத்தை கண்டால் பொங்கும் போராளிகள் போல நேர்மைக்கு மாறான ஒன்றாக கருதும் சிறுபான்மையில் நடக்கும் மூடத்தனத்தை எதிர்த்து சில மனக்குமுறல்கள்.


  • இந்தியாவின் சிறுபான்மை மதமான இசுலாம் கிறித்தவம் மதங்களில் இருக்கும் குரான் பைபிளில் இருந்து நீங்கள் எந்த ஒரு வார்த்தையையும் சேர்க்கவும் முடியாது. பிரிக்கவும் முடியாது. பைபிள் ஆவது புதிய ஏற்பாடு வந்தது. ஆனால் குரானில் ஒரு வார்த்தை கூட மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.

வழக்கொழிந்து போன கையேடுகளை இன்னமும் புனிதத்தன்மை மாறாது பாதுகாப்பதில் இருக்கும் சூட்சுமம் என்ன?


கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். பழைமை எனும் பெயரில் மூடத்தனம் மிகுந்திருக்கிறது. கடவுளுக்கு நாம் யாவரும் குழந்தை என்பதில் ஐயமில்லை எனக்கு. குழந்தையை ஒதுக்கி வைத்துவிட்டு கடவுள் என்ன இன்பம் அடைந்துவிடுவார்? அர்த்தமற்றவை. கடவுள் தீட்டு அடையும் அளவுக்கு அவர் சாதராணமில்லை என்பதை உணர வேண்டும். இந்து மத உணர்வாளர்கள் கொந்தளிப்பது பெரிதில்லை. மூடத்தனம். அதில் பேசிப்பயனேதும் இல்லை. புரிந்துக் கொள்ளாதவர்கள் கடவுளை உணராதவர்கள். உணர்ந்தவன் புரிந்ததாக புறம்பேசமாட்டான்.

இந்த தீர்ப்பு பா.ஜா.க‌. ஆட்சியில் வெளிவந்தது அதிசியம்தான். மோடி ஆட்சி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்து நாடாக்கி விடுமோ என்ற அச்சம் உள்ளுர இருப்பது ஒன்று. இதே தீர்ப்பு வேறொரு ஆட்சியில் வெளிவந்திருந்தால் இந்த தீர்ப்பின் மகத்துவம் வெற்றி களிப்புகள் வேறொரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டிருக்கும்.
பேச வேண்டியதற்கு வருகிறேன். இசுலாத்தில் இருக்கும் தலாக் முறையை நீக்க எவ்வளவு எதிர்ப்பு என்று நாடறியும். இந்து மதத்தில் ஈசனிலிருந்து நாடார் தெய்வங்கள் ஈராக எவ்வளவோ இருக்கிறது. நாத்திகத்துக்கும் இடமிருக்கிறது. அது பகுத்தறிவு எனும் பெயரில் சீரழிந்து வருகிறது. அது வேறொரு விவாதத்தை கொண்டு போகுமென்பதால் தவிர்ப்போம். சிறுபான்மை மதம் என்பதால் அதிலிருக்கும் குறைகளை யாரும் பேசுவதே கூட கிடையாது. அதிலும் இசுலாம் மதம் பற்றி பேச பீதியுண்டாகிறது. மதத்தீவிரவாதிகளிலே இசுலாம் மதத்தை சேர்ந்தவர்களிடம் அதிக பயம் இருப்பதுதான் இதற்கு காரணமாக இருக்கலாம். இந்து மதம் மாற்றத்திற்கு உட்படக்கூடியது. ஆனால் குரானில் இருந்து ஒரு வார்த்தையைக் கூட உங்களால் வெளியேற்ற முடியாது. காலம் போன போக்கில் கூட வழக்கொழிந்து போன கையேடுகளை முழுமையான ஒன்றென முஷ்டி உயரத்தி பேசுபவர்களிடம் விவாதித்து பலனுண்டா? இங்கும் சிறுபான்மையின் மெஜாரிட்டி வெற்றியடைந்துவிடும். சிறுபான்மையின் சிறுபான்மையினரை பற்றி எதுவுமே பேசக்கூடாது என்பது உச்சகட்ட பாசிசம்.
சிறுபான்மையோ பெரும்பான்மையோ இந்த தியரியில் முக்கியமில்லை‌. அதனூடாக பெரும் கருத்துக்களின் விளைவுகளே முக்கியமானது.

  • தலித்துகள் பற்றி யாரும் எதுவும் பேசக்கூடாது. வீர வன்னியர் என்று போஸ்டர் அடிக்கும் அதே சுயசாதி பெருமையை "வீர பரையன்டா " என்று போஸ்டர் ஒட்டும் தலித்துகளை யாரும் கேள்வி கேட்பதில்லை. ஏனென்றால் அவர்கள் சிறுபான்மை. அம்பேத்காரை முறைமையாக வாசிக்காதவர்கள். சாதி ஒழிப்பு புத்தகத்தில் முற்காலத்தில் நடந்தவற்றை நியாபகப்படுத்தி பிரச்சினையை உண்டாக்க தேவையில்லை என்று ஆணித்தரமாக சொல்கிறார். ஆனால் போராளிகள் செய்வது இதற்கு மாறாக. சாதி இருக்கிறது. அதை ஒழிக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அது ஒழியப்போவதில்லை என்பது நடைமுறை சிக்கல். அதுவும் வேறொரு விவாதத்தை கொண்டு போகுமென்பதால் தவிர்ப்போம். 

  • சட்ட மேதை இயற்றிய சட்டத்தையே மதிக்காதவர்கள் எப்படி அவரது ஆன்மாவை சரியாக புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்பது மிகப்பெரிய சந்தேகம். அம்பேத்கரை முழுமையாக வாசித்து அவரை கடக்க வேண்டும். அவர் சொன்னதில் இருக்கும் தற்போதைய நிலைமை என்னவென்று ஆராய வேண்டும். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் என்பதை மறந்து விடுவதால் வரும் கோளாறு. போராளிகள் சாகும்வரை அதில் ஒரு சதவீதம் கூட நிகழப்போவதில்லை.

  • தலித்துகள் படம் எடுத்தால் அது ஒலக சினிமாவாக எழுதினால் கலை இலக்கியமாக மடைமாற்றம் செய்யப்படுவது தற்போதைய இழிநிலை. அதற்கு ட்ரெண்டிங் என்று பெயர். எல்லாம் கமர்ஷியல் குப்பை என்பதை தன்னுணர்வு உள்ள எவனும் புரிந்து கொள்ளலாம். காலா படம் எடுத்ததால் பம்பாய் சேரி மக்களுக்கு எத்தனை சதவீதம் நன்மை அடைந்தது? அல்லது நிஜமாகவே பம்பாய் சேரியின் பிரச்சினைகளை அது பேசியதா? படம் எவ்வளவு வசூலானது- அதில் கதாநாயகன்- தயாரிப்பாளர்- இயக்குனருக்கு எவ்வளவு சம்பளம் என்பதே மீதிக்கதை. வாசுகி பாஸ்கர் போன்ற போராளிகள் எழுத்தாளர்கள் ஆனால் எழுத்தாளர்களுக்கு என்ன மரியாதை. ஜெயமோகன் 2.0 க்கு வசனம் எழுதியதால் அதில் இந்துத்துவ கருத்துக்கள் இருக்கும் என்று இப்போதே முஷ்டி உயர்த்தும் கோஷ்டி sarcasm செய்கிறது. ஆமாம் தமிழ் பிரபாவைதான் எழுத வைத்திருக்க வேண்டும் என்பது அவரைத் தனிமனித தாக்குதலில் இழுத்து விட்டது போல படலாம் என்பதால் வரைமுறையற்ற சர்காஸத்தை நான் தவிர்க்கிறேன்.

  • பாரதி முதல் சுந்தர ராமசாமி தி.ஜானகிராமன் அசோகமித்திரன் மணிரத்னம் வரை பிராமணர் என்ற காரணத்துக்காகவே புறக்கணிக்கப்படுவதை அவதானிக்கலாம். பிறப்பால் ஒருவன் புறக்கணிக்கப்பட்டுவது எவ்வகையிலும் குற்றமே. அவன் தலித்தாக இருந்தால் அது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. அதே புறக்கணிக்கப்பட்ட பிராமணனுக்கு உச்சுக்கொட்ட கூட பயம் மற்றவர்களுக்கு.‌ 

  •  பிள்ளையார் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகளை உடைக்கும் பெரியார் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலம் ஆவது ஞாயிற்றுக்கிழமை ஆனால் கறிக்கடையில் கூட்டம் கூடுவது போல இயல்பு. அந்த பிரச்சினைக்கு அப்போதைய நீதிமன்றம் அவரது சொந்த செலவில் சிலை செய்து உடைக்கிறார் உங்களுக்கு என்ன என்பது தீர்ப்பு. நானும் எனது சொந்த செலவில் பெரியார் சிலையை உடைக்கட்டுமா என்று கேள்வி கேட்டால் என் மீது வழக்குகள் தொடரலாம். அல்லது எச்.ராஜாவோடு என்னை குடும்பப்படுத்துவர். எச்‌.ராஜா இந்து மதத்திற்கே ஒரு சாபக்கேடு என்பதை உணராத வரை அது இந்துக்களுக்கு தான் இழப்பு. 
  •  முஸ்லீம், தலித் அடுத்த சிறுபான்மை பெண்கள் . பெண்ணை பற்றி‌ எதுவுமே பேசிவிடக்கூடாது. மகளிர் மன்றங்கள் வந்துவிடும். பெண்ணியவாதிகள் புற்றீசலாக பறந்து வருவர். ஆணை  விட மிகுந்த பொறுப்புணர்வு உள்ள ஜீவன் பெண் என்பது எனது அனுபவத்தில் கண்டடைந்த உண்மை. பெண்கள் எப்போதும் ஒடுக்கப்படும் இனமென்பதில் மாற்றில்லை. எல்லாவற்றுக்கும் ஆனால் எனவொன்று இருக்கிறதே. வீட்டில் சமையல் செய்யும் ஆண் ஒருவனை “இவன் என்ன பொம்பலையாட்டும் செய்யறான்” என சொல்லி அவனுக்கு ஆண்மையை ஊட்டுவதே பெண்கள்தான். இந்த மாதிரி தண்டங்களால் கடைசிவரை தண்டிக்கப்படுவது அவர்களினமே.
கூகுள் புகைப்படங்கள்
  • அடுத்து திருநங்கைகள். விளிம்பு நிலை மக்கள் என்று சொல்வது இவர்களுக்கு மட்டுமே தற்போதைக்கு பொருந்தும் என நினைக்கிறேன். ஆனால் பேருந்தில் இரயில் பயணங்களில் திருநங்கைகள் செய்யும் அட்டகாசத்திற்கு வக்காலத்து வாங்கும் பின்நவீனத்துவ பார்வையை நிராகரிக்கிறேன். நான் சிறுபான்மை என்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது சுதந்திர அத்துமீறல். அது பெரும்பான்மையினரை புண்படுத்தும் நோக்கத்தோடே செய்யப்படுகிறது. பெரும்பான்மை என்பதால் அதையெல்லாம் சகித்துக் கொள்ள வேண்டுமா? இன்றைய சிறுபான்மை நாளைய பெரும்பான்மை ஆகும் பட்சத்தில் அவர்களே அதற்கு எதிரானவர்களாக மாறுவர். அந்தக் கோணத்தில் நிகழ்வது முரணானது. அந்த முரணை என்றும் விமர்சிப்பேன். இல்லை எனது மனக்குமுறலை பதிவு செய்வேன்.





Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :