அறைகுறையான ஆடை :


" அமலாபால் ஆடையின்றி‌ நடித்திருக்கும் படம் ஆடை" என்றவாறு விளம்பரப்படுத்தி எடுக்கப்பட்ட  படத்தை பற்றிய எனது பார்வையை முன்வைத்துள்ளேன்.


ஆடை டீசரில் இருந்த அடர்த்தி ட்ரெய்லரில் இல்லை என்பதை அனைவருமே அறிவர். படத்தில் அது எவ்வாறு இருந்தது?.  முதலில் மையக் கதாபாத்திர வடிவமைப்பை பற்றியும் அதன் வளர்ச்சி வீழ்ச்சியில் திரைக்கதை எப்படி இருந்தது என்பதை சொல்ல விழைகிறேன். கோயிலுக்கு செல்ல விரும்பாத புடவை அணிய விரும்பாத மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பை தராத (இதிலேயும் கேள்வி குறி உள்ளது ஏனெனில் தாயின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து புடவையணிந்து செய்தி வாசிப்பது) சுவாரஸ்யத்திற்காக தனது அகங்காரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தற்கால பெமினிஸ்ட். இதில் பெமினிஸ்ட் என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.

ஆரம்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்றிற்காக தான் பழிவாங்கப்படுகிறோம் என்பதை படத்தின் இறுதியில் மையக் கதாபாத்திரத்திற்கு தெரிகிறது. பார்வையாளர்களான நமக்கும் அப்போதுதான் தெரியும். உடனே மையக் கதாபாத்திரம் மனமாற்றம் அடைந்து விடுகிறது. அந்த முக்கியமான திரைக்கதையின் நம்பகத்தன்மை போலியான ஒன்று. வலிந்து திணிக்கப்பட்டது என்பதை பார்ப்போம்.


1. கிராமத்தில் இருந்து வரும் புத்திசாலியான ஆனால் அதே சமயத்தில் அப்பாவியான பெண்ணாக பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரம். நல்ல இமாஜினேஷன்.! அந்த ப்ரான்க் நிகழ்ச்சிகாக எவ்வளவு நேரம் செலவாகியிருக்கும். பாதிக்கப்பட்ட பெண்ணை பார்த்து தண்ணீர் பிடித்து குடுத்து ஆட்டோவில் ஏற முயற்சிக்க 10 நிமிடம் பிடித்திருக்கும். சரி 30 நிமிடம் கூட ஆகியிருக்கட்டும். மீதி நேரத்தில் தேர்வு கூடத்திற்கு சென்று தேர்வை எழுதியிருக்கலாம். இல்லையென்றாலும் அவர்களிடமே சொல்லியிருந்தால் கூட அவர்களே கூட்டிக்கொண்டு சென்றிருப்பார்கள். இந்த சின்ன விஷயத்தை எதிர்க்கொள்ள மனத்தைரியம் இல்லாத பெண் எப்படி கலெக்டர் ஆவார் ! முடவன் கொம்புத்தேனு கதையாகிவிடாதா ரைட்டர் ஸாரே.  பெண் கலெக்டர் தேர்வு எழுதுபவர்கள் பல மணி நேரம் முன்பாகவே அந்த தேர்வுக்கூடத்தை அடைந்து விடுவர். ஏனெனில் புதியதாக வருபவர்களுக்கு அது எப்போதும் உள்ள நுண்ணறிவு. இந்த காலம் தவறாமை இல்லாமல் அவர் கலெக்டர் ஆகியிருந்தால் ஒரு மாவட்டமே வீணாகிபோயிருக்கும். இதனால் அந்த ப்ரான்க் நிகழ்வு சரியென வாதடவில்லை. அந்த ப்ரான்க் நிகழ்வு அவளை அந்தளவு பாதிக்க வாய்ப்பே இல்லை. குறைவான நேரம் மட்டுமே அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். மீதி தவறு அவளது மீதுதான். 10 மணிக்கு என்றால் 9.30 மணிக்கு கூட முகவரி தெரியாமல் சுற்றுவது யாரின் தவறு? என்ன பொறுப்பான கலெக்டர். பச். திரைக்கதையின் முக்கிய திருப்பமே இப்படி வலுவற்றதாக இருந்தால் என்ன செய்வது!

இதற்குத் தான் முதலிலேயே புத்திசாலியான அப்பாவியான பெண் என்ற இமாஜினேஷன். நல்ல இமாஜினேஷன் தான் !

2. ஒரு அறையில் யாரும் இல்லையென்று தெரிந்தாலும் யாராவது மார்பின் மேல் கைவைத்து கொண்டே சுற்றுவார்களா என்பது பெருத்த சந்தேகம். அதுவும் பெமினிஸ்ட் என்று முத்திரை குத்திவிட்டு இப்படியான காட்சிகள் கதாபாத்திர சிதைவு என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் சிரிப்பை வரவழைக்கும் காட்சிகள் அவை. இயக்குனர்  ஒருமுறை‌கூட ஆடையின்றி இருந்ததில்லை என்பது தெரிகிறது. எழுத்து மிகவும் அடிப்படை. அதற்கு கூரிய பார்வையும் அனுபவமும் வேண்டும்.

3.Nude ஆக நடிப்பதே மக்களுக்கு அந்த காட்சியின் வீரியத்தை கடத்ததான். Nude ஆக நடித்தும் மக்களுக்கு blur பண்ணி காட்டுவதும்  குறுக்கால நாலு கம்பி வைத்து மறைத்து  காட்டுவதற்கும் எதற்கு ஆடையின்றி நடிக்க வைக்க வேண்டும் ? தனது இந்த புத்திசாலி தனத்தை ஆடை வைத்தே எடுத்திருக்கலாம். இதில் ஏமாறுவது மக்களா? அமலாபால் எனும் நடிகையா? நுகர்வோர்களுக்காக என்று சொல்லி விட்டு சேர்க்கும் இனிப்புகள் நுகர்வோருக்கு போய்சேரவில்லை எனில் அதை நுகர்வது யார்? அந்த இனிப்பை ஏன் சேர்க்க வேண்டும்? எனக்கு தெரிந்து ஏமாற்றப்பட்டது அமலாபால் தான். பிறகுதான் பார்வையாளர்கள். இதில் ஒளிந்திருப்பது வியாபார நோக்கம் மட்டுமே. கலை இங்கிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது.


Parched படத்தில் ராதிகா ஆப்தே நடித்த காட்சியில் வக்ரமும் இல்லை ; ஆபாசமும் இல்லை. உறுத்தவும் இல்லை மறைக்கவும் இல்லை. மிகவும் இயற்கையான காட்சிகள். அதை வைத்து விளம்பரங்கள் செய்து தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் காசடிக்கவும் இல்லை.

4. உடனிருந்த நண்பர்கள் காமினியை வீட்டுக்கு அனுப்பி வைக்காமலேவா கிளம்பி விடுவார்கள்? ரம்யாவின் தகப்பனார் மட்டுமா அந்த கட்டிடத்திற்கு வந்து அவரது மகளை கூட்டிக்கொண்டு சென்றிருப்பார்? பின்னர் ஓர்‌ ஆள் அவ்வளவு தூரத்தில் உள்ள கட்டிடத்தில் இருந்து மொபைல் கேமிராவிலே ஜூம் செய்து பார்க்கிறார். அது என்ன வகையான மொபைல் போன் என்று தெரிந்தால் மக்களும் வாங்குவார்கள். 👦

வேண்டுமானால் காமினி அம்மாவை வைத்தே உணர்ச்சி வசப்படும் விபத்து போன்ற நாடகத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதுதானே பலிவாங்கல்.  ஆடையின்றி இருக்க வேண்டும் என்ற பலிவாங்கல் என்பதெல்லாம் மிகவும் கோழைத்தனமான திரைக்கதை. காசடிக்க எதை கூறினால் கூட்டம் வரும் என்பது தான் தெரிகிறது.  இயக்குனர் முதலில் இலக்கியங்களை வாசிக்க வேண்டும். கூர்ந்த வாசிப்பிற்கு பிறகே இந்த நுணுக்கங்கள் கைவரும். ஜீன்‌பால் சாத்தரின் கூகிள் quote மட்டும் படத்தில் ஒட்டினால் போதாது. அவரின் ஆக்கங்களை படித்திருந்தால் இப்படி சொதப்பிக்கொண்டு இருக்கமாட்டார். முதலில் இதை கலைப்படைப்பாக எடுத்திருக்கலாம் அல்லது வணிக படமாக எடுத்திருக்கலாம். இரண்டுமே கைவராமல் சொதப்பிக்கொண்டு இருப்பதற்கு கமர்ஷியல் படம் மேலானது. செமி ஆர்ட் ப்ளிம்க்கு தமிழில் மெட்ராஸ் படம் சிறந்த உதாரணம்.

படத்தில் ஒளிப்பதிவு செம்மை. ஆனால் இந்த டெக்னிக்கல் எல்லாம் படத்திற்கு உதவவேண்டுமே அன்றி‌ தனியாக துரித்திக்கொண்டு இருக்கக் கூடாது. கன்டன்ட் ஒழுங்காக இல்லாமல் டெக்னீசியனை வைத்து ஒப்பேற்ற முடியாது. இரட்டை அர்த்தம் தரும் வசனங்கள் கச்சிதமாக இருந்தது. வேறெதுவும் சிறப்பாக இருந்ததாக தெரியவில்லை.

அமலாபால் underrated actress  overrated actress என்பதெல்லாம் அவரவர் பார்வையை சார்ந்தது. அவர் நடித்திருக்கும் படங்கள் பெரும்பாலும் கமர்ஷியல் குப்பைகள் தான். வெகுசில நல்ல கதாபாத்திரங்களும் உண்டு. நான் சிந்துசமவெளி மைனா படங்களுக்கு பிறகு அவரது நீலத்தாமராவிலிருந்து எல்லா படங்களையும் பார்த்திருக்கிறேன்.

 பாலுமகேந்திரா மட்டும் உயிரோடு இருந்திருந்து இளையராஜா இசையில் ஒரு மான்டேஜ் பாடலுக்கு அமலாபாலை வைத்து எடுத்திருந்தால் அந்த பாடலை ஓர் ஆயிரம் தடவை ஆவது பார்த்திருப்பேன். பாலுமகேந்திராவின் கதாநாயகிகளுக்கே இருக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த முகவெட்டு குரலை இக்கால கட்டத்தில் வாழும் மிகச்சொற்பமான நடிகைகளில் அமலாபாலுக்கு இயற்கை வழங்கியுள்ளது என்பது என் எண்ணம். அந்த நிறம், முகவெட்டு, சிரிப்பு, பெரிய பொட்டு, மற்றும் புடவை அணிந்து அமலாபால் புல்வெளியில் நடந்து வரும் காட்சி மனத்தில் ஓட்டிப் பார்க்கும்போது பாலுமகேந்திராவை மிஸ் செய்கிறேன். அவரது இருப்பின்மை அமலாபாலை பார்க்கும்போதெல்லாம் இந்நிகழாக்கனவு ஒரு ப்ரேமாவது வராமல் இருப்பதில்லை.


கருத்து சொல்ல வேண்டும் என்ற தன்முனைப்புடனேயே எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் சலிப்பையே தருகிறது. அறிவுரை என்ற பெயரில் காமிராவை பார்த்து ஏகத்துக்கும் வசனம் பேசுவது சலிப்பான வாழ்வில் மேலும் சலிப்பை கூட்டுகிறது. கலை இங்கிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது.Art film எடுக்கிறேன் என்ற பெயரில் கமர்ஷியல் படங்களை விட மோசமாக எடுப்பவர் பட்டியலில் ரத்தினகுமார் இணையாமல் இருப்பது நல்லது. ஏனெனில் போலித்தனம் மோசமானது.

அவரது முதல் படமான மேயாத மானில் கூட தங்கச்சி கதாபாத்திரம் நண்பன் கதாபாத்திரம் மட்டுமே புதுமை; தனித்துவமானது. அது தான் அவரின் பலம். மீதியெல்லாம் வழக்கமான கமர்ஷியல் ஜிகினா. கமர்ஷியல் படம் எடுக்கவே கூடாதென்றில்லை அதிலேயும் ஒரிஜினலாக இருங்கள் என்பதுதான். பாகுபலி படம் வந்துவிட்ட பிறகு அதே பாணியில் எடுக்கிறேன் என்ற பெயரில் எவ்வளவோ வந்து விட்டது எதுவுமே அந்த தரத்தில் இல்லை ; எதுவுமே மக்களையும் கவரவில்லை.


Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :