ரூஹ் - லஷ்மி சரவணக்குமார்.
விமர்சனம் என்பது நல்ல படைப்புகள் பற்றி மட்டுமே எழுதுவது என்ற குறுகிய பார்வை நிலவி வருகிறது. கட்டுரை போட்டிகளில் இதுவரை பரிசு பெற்ற கட்டுரைகள் எல்லாம் அந்த வகையிலே இருப்பது ஆரோக்கியமானதாக தோன்றவில்லை. எனது அனுபவம் கசப்பாகவே இருந்து வருகிறது. விமர்சனம் என்பது எந்த படைப்பு பற்றியும் தனதளவில் நேர்மையான ஒன்றாக இருந்தால் போதும். மேலும் நல்ல படைப்பை விட சுமாரான படைப்புகளுக்கும் மோசமான படைப்புகளுக்கும் தான் விமர்சனங்கள் தேவைப்படுகிறது என்பது என்னுடைய திடமான கருத்து. ( அழிசி கட்டுரைப் போட்டி 2019 க்கு எழுதப்பட்டது. தேர்வாகும் தகுதியில்லை என்று முடிவு வெளியிடப்பட்டது 😂).
விதிமுறைகளின் படி நான் எடுத்துக் கொண்ட நாவல் - ரூஹ். லட்சுமி சரவணகுமார் எழுதியது. அமேசான் கிண்டலில் கிடைக்கிறது. விலை ₹45 மட்டுமே. "தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே..". என்ற முன்னுரை தலைப்பிலேயே கதையின் மையத்தை ஆசிரியர் தெளிவு படுத்திவிடுகிறார். இது நாவலில் எவ்வாறு தொழிற்பட்டு இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஆரம்ப நிகழ்வு நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழா ஒன்றில் பேத்தியின் கைகளை இருக பற்றியிருப்பதனால் பேத்தியின் கைகளில் அந்த வடு தெரியும் பட்டாசுகளின் நெடி மூக்கில் பரவும் என்ற அளவுக்கு விவரணைகள் நம்மை கதைக்குள் எளிதாக பயணிக்க வைக்கிறது. முதல் பகுதி அழகான வர்ணனைகளாலும் ராபியா யார் ஜோதி யாரென்ற பரபரப்பு நம்மை தொற்றிக் கொள்கிறது.
லஷ்மி சரவணகுமாரின் ஒட்டுமொத்த நாவலையும் வாசித்து இருப்பதனால் பல இடங்களை முன் கூட்டியே ஊகிக்க வேண்டியதாக இருந்தது. நேர்மாறாக அது நடக்காமல் போன இடங்களும் இருந்தது. குறிப்பாக அந்த மரகதக்கல் ஆகட்டும் ஜோதிக்கும் ராபியாவிற்கும் தொடர்பு ஏற்படும் என்ற கணிப்பு. அடுத்து கட்டையன் என்று நண்பன் கதாபாத்திரம் வருகையில் அவனுடனான ஓர்பால் ஈர்ப்பு வந்துவிடுமோ என்ற எண்ணத்தை தவிர்க்க இயலவில்லை. நல்லவேளையாக ஏமாந்தேன். இல்லையெனில் அவரது உப்பு நாய்கள் கொமோரா நினைவுகள் ஊடறுத்து கொண்டே இருந்திருக்கும்.
லஷ்மி சரவணகுமார் ஒரே கதையைத் தான் திரும்ப திரும்ப எழுதிக் கொண்டு இருக்கிறாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. எப்போதும் ஒரு மேற்கோளில் இருந்து கதையை ஆரம்பிப்பது அவரது வழக்கமான நடையாகவே இருந்து வருகிறது. லஷ்மி சரவணகுமாரின் கதையில் குழந்தைகள் வல்லுறவுக்கு உட்படும் பகுதிகள் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவர் எப்போதும் அதை பதிவு செய்து கொண்டே வருகிறார். அநேகமாக அது அவரது சொந்த அனுபமாக இருக்க கூடும். அடுத்து பாலுணர்வுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் அற்ற எல்லாரையும் புணர துடிக்கும் ஆண் கதாபாத்திரம் எப்போதும் அவரது கதாநாயகனாகவே இருக்கிறார்கள். அவர்கள் இளைய வயதில் வருமையில் திண்டாடி எல்லா வேலைகளையும் கற்றுக் கொள்ள தலைப்படுகிறார்கள். அவர்கள் எளிதில் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். சான்றாக இந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்களையே எடுத்துக் கொள்வோம். ஜோதி - அன்வர் - அஹ்மத் இந்த மூன்று பேருமே ஒரே விதமாகத்தான் வேலையை கற்றுக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் தடுமாறி பின்னர் எல்லோரை விடவும் சீக்கிரமே கற்றுக் கொள்கிறார்கள்.ஜோதியின் தங்கைக்கு கூட அதே டெம்ப்ளேட் தான். இது ஆசிரியரின் தாக்கம் அன்று வேறில்லை.
பிரச்சினை இங்கு தான் ஆரம்பமாகிறது. மூன்று கதாபாத்திரங்களும் வெவ்வேறான தனித்துவமான கதாபாத்திரங்களாக தங்களது தன்னியல்பை வளர்த்து இருக்க வேண்டும். நாவலில் யாருக்கும் எந்தவிதமான தனித்தன்மை இருப்பதாக உணர்ந்ததில்லை. ஆசிரியர் மட்டுமே இவர்கள் அப்படி இப்படி என்று வரையறை செய்கிறார். அது மேலோட்டமாக நின்று விடுகிறது. உதாரணமாக அன்வருக்கு பேராசை இருப்பதை ஆரம்பத்தில் எங்கேயும் ஆசிரியர் குறிப்பிடவில்லை. திடீரென அந்த பழக்கத்தை இடைச்செருகலாக வைக்கிறார். இது திருப்புமுனை ஏற்படுத்த வைக்கும் அதிர்ச்சி மதிப்பீடாக தொக்கி நிற்கிறது. ஆனால் அதைத்தவிரத்து அன்வர் கதாபாத்திரம் நன்றாக வளர்ச்சி அடைந்திருந்தது மற்றவற்றை விட. நண்பனின் கடனுதவியில் இருக்கும் ஆபாசத்தினை கண்டதும் கொதித்தெழுந்து தன்னையறிந்து முன்னேற எத்தனிக்கும் இடங்கள் நிஜமாகவே நல்ல படைப்பை வாசிக்கும் இன்பம் இருந்தது.
ஜோதி ஆரம்பத்தில் பெண் தன்மை கொண்டவராக சித்தரிக்கப்படுகிறார். அவர் மட்டுமே கடைசி வரைக்கும் அதன் பழக்கங்களை நீண்ட நாட்களுக்கு தொடர்வதாக தெரிகிறது. நாளடைவில் அவரும் இயல்பாகி விடுகிறார். மேலும் அந்த முக்கிய திருப்பு முனையாக அமையும் ராபியின் கணவர் இறப்பது வழக்கமான சடங்காக பட்டது.
கதாநாயகர்களுக்கு பொறுப்பு வருவதற்கு அன்பிற்குரிய யாரேனும் ஒருவர் இறக்க வேண்டியிருக்கிறது. இறந்ததும் பொறுப்பு தானே வருகிறது. ஏனிந்த திரைக்கதை டெம்ப்ளேட் ? எத்தனை கதைகளில் எத்தனை திரைப்படங்களில் இதையே பார்ப்பது. இதுதான் திரைக்கதை யுக்தியா! நமக்கு பொறுப்பு வர ஒருவரை சாகடிக்கும் யுக்தி மிகுந்த சலிப்பை தருகிறது.
லஷ்மி சரவணகுமாரின் கதையில் ஒரு சாமியார் எப்படியாகிலும் வந்து விடுகிறார். அவர்தான் கதையை ஆன்மீக தளத்துக்கு பயணிக்க உதவி புரிகிறார். இது மிகவும் அதர பழசான ஒரு யுக்தி. இதிலேயும் தனித்துவமான சாமியார் என்றெல்லாம் இல்லை. கானகன் நாவலில் ஆன்மாக்களை ஜேப்படி செய்தது போல இதில் இல்லை. குறைவான ஆன்மாக்களே வந்தது. இருந்தும் சில இடங்களில் தத்துவங்களை மிகவும் மேலோட்டமாக எழுதியிருக்கிறார் என்று தோன்றுகிறது. உதாரணமாக, கடல் அதன் அருகிலுள்ள மக்களின் மூர்க்கதனத்தை எடுத்துக் கொள்வதாகவும், மக்களும் கடலின் மூர்க்கத்தனத்தை எடுத்துக் கொள்வதாகவும் எழுதுகிறார். பின்னர் கடலலை பார்த்து மக்கள் பயப்படுவதாக எழுதுகிறார். இது சிரிப்பை வரவழைக்கும் விதமாகத்தான் இருக்கிறது.
"விருப்பமானவர்களை வெறுத்து ஒதுக்கும் கணங்களைப் போல் துயரமானது வேறில்லை" என்ற வரிகளில் உயிர்ப்புடன் பிரகாசிக்கிறது. ஜோதி தான் விரும்பும் ராபியாவிற்காக எதை வேண்டுமானாலும் செய்ய நினைப்பது தன்னை அவளுக்காக காயப்படுத்தி கொள்வதும் சிறப்பாக வந்துள்ளது. தங்கை மற்றும் ராபியா குறித்த இடங்கள் ஆணின் உளவியலை சரியாக சொன்ன இடங்களாக நான் கருதுகிறேன். அநேகமாக இதுதான் இந்த நாவலின் சிறந்த இடங்கள் என்றே கூறுவேன்.
அந்த அஹ்மத் கதாபாத்திரம் ஆகட்டும் அந்த மரகதக்கல் ஆகட்டும் இறுதியில் ஜோதி சாமியாராகட்டும் இதெல்லாம் பழைய யுக்தி. நிறைய சினிமா சீரியல்களிலே பார்த்தாகிவிட்டது. ஜோதி உண்மையில் ராபியாவை விட்டு பிரிந்து இருக்கவே முடியாது. அன்வர் இறந்தது அவனுக்கு ஒருவகையில் நல்லதுதானே. அதனால் அவன் எல்லாவற்றையும் துறப்பது சற்று வேடிக்கையான ஒன்றாக இருந்தது. உண்மையில் அவன் புண்படுவதாக இருந்தால் அது ராபியாவின் துரோகம் அப்படி எதாவது தான் இருந்திருக்க வேண்டும். புனைவுகள் குறுகிய இடங்கள் என இதை சொல்லலாம்.
கடலோடி கதைசொல்லி என்று அவர்களை மிகவும் ரொமான்டிசைஸ் செய்து விட்டார். அதிலும் கதைசொல்லி பற்றியவை மிகவும் ஆசிரியர் சார்பான ஒன்று. ஆசிரியர் சார்பு மிதமிஞ்சிய அளவில் கதையில் கதாபாத்திர வார்ப்புருக்களில் தங்கி விட்டால் அது கலையை கெடுத்து விடும். அசோகமித்திரன் போல சார்பற்று எழுதுவது கடினமானாலும் இத்தனை வருடங்கள் எழுதியும் கைக்கூடாதது துரதிர்ஷ்டவசமாக நினைக்கிறேன்.
ஜோதியின் தகப்பனார் கதாபாத்திரம் மட்டுமே இன்னும் விரித்து எழுதியிருந்தால் அதில் கலைஞன் படும் பாடு அழிந்து வரும் கலை என ஒரு மகோன்னத நிலையை அடைந்திருக்கிலாம். லஷ்மி தவறவிட்ட இடமாக இதையும் காண்கிறேன். இத்தனை வருடங்கள் எழுதியும் லஷ்மிக்கு உரையாடல் எழுத வரவில்லை என்பது முக்கியமான குறையாக காண்கிறேன். முஸ்லிம்கள் எப்படி பேசுவார்கள் என்ற விவரணைகள் மிகமிகக் குறைவாகவே இருந்தது. இதே தோப்பில் முகம்மது மீரான் அர்ஷியா அவர்கள் எழுதுவதில் வித்தியாசம் தென்படும். பெண் கதாபாத்திரங்கள் கூட ஆண் போலவே உரையாடுகிறது. இதையெல்லாம் சிறு சிறு பிழையாக நினைத்து உதராமல் சற்று சிரத்தையுடன் எழுதினால் நல்ல படைப்புகள் வரும் என்பது அனுமானம்.
"சொந்த ஊர்க்காரர்களிடம் மரியாதையை சம்பாதிக்க ஒரு மனிதன் வேறு ஊர்களுக்கு பஞ்சம் பிழைக்க போகவேண்டியிருப்பதை துயரமென்றுதான் சொல்ல வேண்டும்" இந்த வரிகளிலும் உயிர்ப்பு மிளிர்கிறது. இதையெல்லாம் நிச்சயமாக கதைசொல்லி அனுபவித்து இருக்க வேண்டும். நாம் அனுபவித்த ஒன்றை எழுதும்போது அது அசலான ஒன்றாக வெளிப்படுவதை கவனிக்கலாம். நாம் அனுபவிக்காத ஒன்றை உணர்ந்து விட்டது போல எழுதும்போது மாட்டிக் கொள்கிறோம். அப்படி லஷ்மி சரவணகுமார் நிறைய இடங்களில் இடறியிருக்கிறார். கடல் கப்பல் மலையேற்றம் பழைய அரண்மனை இரும்பு கடை வேலை என்ற இடங்களில் விவரணைகள் மிகமிகக் குறைவு. எந்தவிதமான nuancesகளும் அன்றிருந்த இடங்கள் அவை. வெறுமனே பொதுப்படையான கருத்துகளை வைத்து எழுதப்பட்டிருக்கிறது. இரும்பை வளைத்து செய்யும் வேலையில் எந்த இடம் மிகவும் சிரமம் என்று அதை செய்தவருக்கு தெரியும்.
ராபியா எல்லாரையும் நேசிக்கும் எல்லாரையும் மன்னிக்கவும் தெரிந்தவள் என்று ஒவ்வொரு முறையும் அவளை பற்றி முன்முடிவை மட்டுமே ஆசிரியர் சொல்கிறாரே தவிர அதற்கு ஒரு நிகழ்வை கூட எடுத்துக் காட்டவில்லை. வெறுமனே துண்டு பிரசுரங்கள் மனதில் நிற்பதில்லை. அது கதையினூடாக நிகழ்கையில் மட்டுமே உணர முடியும். நினைவிலும் நிறுத்த முடியும். மேலும் பிரார்த்தனை செய்யும் மக்களை கவலைகள் ஒருபோதும் நெருங்குவதில்லை என்று எழுதுகிறார். ஆனால் ராபியா அடையாத கவலைகள் இல்லை. உடைந்து அழுகிறாள். கவலை கொள்கிறாள். பின்னர் எப்படி கதைசொல்லியின் வரையறை நிஜமாகும். ஜோதியை வெறுப்பது கூட முரண்பாடுகள் தான். இப்படியாக முரண்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. திட்டமிடப்பட்ட ஒரு திரைக்கதை போல எழுதப்பட்டுள்ளது. முன்னுரையில் கூறியது போல," தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே..".என்ற முன்முடிவு இருப்பவர்களுக்கு துறவு நிச்சயமில்லை. துறவு என்பது காவி வேட்டி கட்டிக்கொண்டு கோயிலில் தஞ்சம் அடைவதையே குறிப்பிடுவது மிகவும் பழைமைவாதத்தையே நினைவுபடுத்துகிறது. Conciousness is sin என்று தாஸ்தாவேஸ்கி சொல்வார். லஷ்மி கதை எழுதும் போது நடந்திருப்பது இதுதான். வரைந்துக்கொண்ட மேல் கோட்டினையே சுற்றி வந்து விட்டார். அதில் இயற்கை கலையின் பரிணாமம் இல்லை. சில நல்ல கணங்கள் மேலெழும் நிகழ்வுகள் மட்டுமே இருந்தது.
ஆக தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே என்ற விழிப்பு இருப்பவர்களுக்கு எவையும் கிடைக்காது; தொலையவும் தொலையாது. ஜோதியின் மாற்றம் இன்னும் சிக்கலான பாதைகளின் ஊடாக சென்று மாறியிருந்தால் நாவல் அதன் முழுமையை அடைந்திருக்கும். அதுவரைக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரியும் நல்ல விஷயங்களை பாராட்டிவிடுவது நமது கடமையாகும்.
கிண்டிலில் பரிசு பெற வாழ்த்துகள்.
Comments
Post a Comment