அகாலம்
இழவு வீட்டின் பிராதன ஊதுபத்தி வாசனை அந்த இடத்தை ஆக்கிரமித்து நெடுநேரமாகிறது. அதை அணையவிடாமல் மேலும் மேலும் எரியவைக்க ஒரு கூலியில்லா ஆளும் நியமிக்கப்பட்டிருந்தார். அழுது அழுது தொண்டை வற்றிப்போயி கோமதியம்மாள் நடையின் ஒரு மூலையில் சாய்ந்திருக்கிறாள். சில ஆட்களும் அதே கலைப்பில் அமைதியாக இருந்தனர். அந்த அமைதி சற்று பயங்கரமாக இருந்தது.
நாங்கள் கொஞ்சம் தூரமாக ஒரு திண்ணையின் ஓரத்தில் இருந்தோம். எனக்கு அருகில் அமர்ந்திருந்த கோமதியம்மாளின் கணவர் ராமையாவுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்து அந்த கணத்தை குழைத்தது. அழைப்பை எடுத்ததும் ," ரே மாப்ள பின்னிகா ஃப்ளைட் எக்கி ராரா. சந்தோஷூ பாய்ல படி சச்சிபோயினாடுரா...." என்று தங்கள் மேல் குற்றமில்லை என்பதை அழுதுக்கொண்டே நிரூபிக்க போராடினார். மறுமுனையில் என்ன பேசினார் என்று தெரியவில்லை. அழைப்பை துண்டித்ததும் அவர் " ஞேனு ஏன்டிக்கு ஏடித்துதனே தெல்லேதுரா ஞைனா..." என்று எனது தோலை பிடித்தார். அழுது ஓய்ந்திருந்த கூட்டம் புத்துயிர்ப்பு அடைந்தது.
கோமதியம்மாளே ஆரம்பித்தாள். " ஐயோ... மா அல்லுடு ஒச்சி அடுக்குதுடே ஞேனு ஏமி செப்பேதி.. நா தெகிர உந்தே டப்புலு மொத்தம்கா கூட இஸ்தானு மா சந்து குட்டி காவல நாக்கு... இதுக்கா சிங்கப்பூர் போயி வேற கஷ்டப்படனும்? ஒழைச்சி என்ன ப்ரயோஜனம். என் பேரனுக்கு தக்கலையே..." தாய்மொழி தெலுங்கு அவர்களுக்கு. தெலுங்கும் தமிழுமாக மாறிமாறி ஒப்பாரி வைத்தாள்; யாரும் அவளை நிறுத்தவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் அந்த சிங்கப்பூர் ஆளிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஏனெனில் நான்தான் அவர்களது பக்கத்து வீடு. நான் சற்று தூரமாக சென்று பேசினேன். "தினேஷ் எப்டிடா நடந்துச்சு சந்தோசுக்கு?" என்பதுதான் முதல் கேள்வி. அவன் விளையாடிவிட்டு ஆய் கழுவ பக்கத்தில் நிரம்பியிருந்த குளத்தில் சென்றிருக்கிறான். அங்கு சேற்றில் மாட்டிக்கொண்டு இறந்ததை நீட்டி மடக்கி கோமதியம்மாளின் மீதும் பார்வதி அக்காவின் மீதும் பிரச்சினை வராதமாதிரி ஒருமாதிரி சொல்லி முடித்தேன். "பார்வதி எங்க போனா அந்த நேரம் கொழந்தையை பார்த்துக்காமா ?" நான் என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியவில்லை.
பார்வதி அக்கா தற்போது ஏழு மாதங்கள் கற்பமாக இருப்பதால் தனது அம்மாவின் வீட்டிற்கு வந்திருந்தாள். விடுமுறை தினமென்பதால் அவளது 2 வயது மகனையும் அழைத்து வந்திருந்தாள். நிலத்தில் பார்வதியும் கோமதியம்மாளும் வேலை செய்து கொண்டு இருந்தனர். சந்தோஷ் எப்போதும் எதையாவது தின்றுவிட்டு மலம் கழிப்பது அவர்களுக்கு சலிப்பையே தந்திருந்தது. நானே கூட ஒருமுறை அவனுக்கு கழுவி விட்டிருக்கிறேன். அது மழைக்காலம் என்பதால் குளத்தில் நீர் நிரம்பியிருந்தது. பார்வதி தான் அவனை அந்த குழத்திலேயே கழுவிக்கோடா என்று சொல்லியிருக்கிறாள். அந்த சேற்றில் மாட்டிக்கொண்டுதான் இறந்து விட்டிருக்கிறான். பார்வதி அக்காவுக்கு நீச்சல் தெரியாது. எனது தங்கை ஓடிவந்து என்னை கூப்பிட்டு இதை சொன்னாள். நான்தான் சென்று சடலத்தை மீட்டேன்.
நான் " தெரியல மாமா " என்றேன். "சரி உன் அக்கவுண்ட்க்கு காசு அனுப்பி வைக்கிறேன் பாத்துக்கோ மதியதுக்குள்ள வந்துருவேன்" . அவர் இதுமாதிரி முன்னமே கூட காசு அனுப்பி இருக்கிறார். பார்வதி அக்கா ஏழாவதை தாண்டவில்லை. படிக்க வீட்டில் தடை. ஆனால் அப்போது நல்ல வாளிப்பான தேகம். நான் சிறுவனாக இருந்த போதிலிருந்தே அவளுடன்தான் சுற்றுவேன். பார்வதி ஒரே பெண்தான் கோமதியம்மா ராமையாவுக்கு. கஞ்சத்தனம் செய்தாலும் பார்வதியை மட்டும் நன்றாக பார்த்துக் கொண்டனர்.
ஆனால் பார்வதி கோமதியம்மா மாதிரி இல்லை. தான் சாப்பிடுவது எதுவானாலும் எனக்கு கொடுத்து விட்டு தான் தின்பாள். நான் எப்போதும் பார்வதி உடன்தான் சுற்றுவேன். நடக்கும் போது செருப்புக்கும் உள்ளங்காலுக்கும் இடையே இடைவெளி காணப்படும். நாங்கள் பள்ளி செல்லும் போது அவளது செருப்பை பின்புறமாக சென்று அந்த இடைவெளியில் மிதிப்பது எனது வழமையான சேட்டை. இரவில் தூங்குவது கூட பார்வதி அக்காகூடத்தான். ஏனோ அவளுடன் இருப்பது எப்போதும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. பார்வதி அக்காவிடம் ஒரு வாசனை வரும் எப்போதும். அது சோப்பிலிருந்து வருமா தலைக்கு போடும் சீகைக்காயில் இருந்து வருமா அல்லது அவளது உடலில் இருந்தா என்றே தெரியாது. ஆனால் கல்யாணம் ஆன பிறகு அந்த வாசனை வருவது நின்று விட்டிருந்தது. நான் அந்த வாசனையை இதுவரை வேறொரு பெண்ணிடம் இருந்து நுகர்ந்ததில்லை. அல்லது அவ்வளவு நெருங்கி பழகியதில்லை. இப்போது எனது தங்கையும் பார்வதி அக்காவும் நெருக்கமென்றால் அப்படி ஒரு நெருக்கம். என்னதான் பேசுவார்களோ தெரியாது ; மணிக்கணக்கில் பேசுவதற்கு பெண்களுக்கு நிறையவே விஷயங்கள் இருக்கிறது போல.
நான் ராமையாவிடம் சென்று ," டப்புலு ஒச்சேசே ஏடிஎம் ல எதுக்குனு அட்லயே நோட்டீஸ் கொட்டிக்குனு ஒத்தான்" என்றேன். "போட்டா பாக உந்தேதே சூச்சி எய்பா ஞைனா! என்றார் இந்த துயரத்துக்கும்மிடையில். நான் சரி என்று தலையசைத்தேன்.
கூட்டத்தில் அழுதுகொண்டு இருந்த அம்மாவை அழைத்து ," மோவ் டீ கீ எதுனா வெச்சி எடுத்துனு போயி குடுமா . பார்வதிக்கா சாய்ந்துரத்துல இருந்து சாப்டல. கோமதி பெரிம்மாவ தனியா கூப்டுனு வா. அழுதுனே இருக்கு பாரு" என்று கூறினேன். எங்களூரில் எல்லோரும் உறவு முறை வைத்து அழைப்பது வழக்கம். " சரி டீ கப்பு காலி ஆய்டிச்சி ஒரு பாக்கெட் வாங்கினு வா" என்று கூடுதல் வேலையை சொன்னாள் அம்மா.
நான் சந்தோஷை நிறைய சந்தோஷ கணங்களில் புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்.நான் எடுத்த புகைப்படங்களிலே அவன் தனது அப்பாவிடம் இருக்கும் புகைப்படம் அத்தனை இயல்பான ஓவியம் மாதிரி இருக்கும். சிங்கப்பூர் மாமாவின் மொபைல் வால்பேப்பரில் இந்த புகைப்படம் தான் எப்போதும் இருக்கும். நான் எடுத்த அவன் தனியாக இருக்கும் மற்ற அழகான புகைப்படங்களில் ஒன்றை தந்து பிரிண்ட் போட கடையில் கொடுத்தேன். "ண்ணா எவ்ளோ நேரம் ஆகும்னா?" " அட்வான்ஸ் தந்தினா அரைமணி நேரத்துல ஆய்டும் தம்பி" என்றார். எந்த நேரத்தில் சென்றாலும் உடனுக்குடன் வேலை செய்து கொடுப்பதில் இவர் கெட்டிக்காரர்.
சிலருக்கு போனில் தகவல் சொல்ல வேண்டும். சிலருக்கு நேரில். ட்ரம்ஸ் அடிப்பவர்களுக்கும் பேசிவிட்டு வந்தேன். நான் எல்லா காரியங்களையும் முடித்து கொண்டு வீட்டிற்கு போக நள்ளிரவு இரண்டு மணி ஆனது. கூட்டம் ஓய்ந்திருந்தது. ஊதுபத்தி வாசனை சற்று குறைந்திருந்தது. ஒரு ஏழு பேர் மட்டும் விழித்து கொண்டு இருந்தார்கள். பார்வதி அக்கா ஒரு ஓரமாக அழுத களைப்பில் சுவரோடு சாய்ந்திருந்தாள். பக்கத்தில் தங்கையும் இருந்தாள். நான் அமைதியாக சென்று அவளுக்கு அருகில் உட்கார்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து வந்த அம்மா டீ எடுத்துக் கொண்டு வந்தார். பார்வதி அக்காக்கும் ஒரு கப் தந்தார். ஆனால் பார்வதி அக்கா வாங்கவில்லை. " ஆனது ஆச்சி திரும்ப வருமா சொல்லு? வயித்துல இருக்கறதுகாச்சும் கொஞ்சம் குடிமா" என்று சமாதானம் செய்தார். இந்த முறை பார்வதி அக்கா மறுக்கவில்லை. எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. பார்வதி அக்காவே ஆரம்பித்தாள், " மாமா எப்போ வர்றார்! செலவுக்கு காசு எதுனா அனுப்புனாறாடா? இந்தா " என்று முந்தானையில் முடித்து வைத்திருந்த கசங்கிய ஐநூறு ரூபாய் தாளினை தந்தாள். " வேணாம்கா அவர் அனுப்பிட்டாரு. மதியதுக்குள்ள வந்துருவாரு" என்றேன்.
திடீரென எனது கையை பிடித்து அழ ஆரம்பித்தாள். " அவரு வந்து கேட்டா என்னடா பதில் சொல்றது நானு " . எனக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. தங்கைக்கும் தெரியவில்லை போல. விழித்து கொண்டு இருந்தாள். நல்லவேளையாக எனதம்மா வந்து சமாதானம் சொன்னார். நான் சிறிது நேரம் கழித்து அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு சென்று தூங்கலாமென புறப்பட்டேன்.
இடைமறித்த ராமைய்யா " ஞைனா நுவ்வு லேதன்டே நேனு ஏமி சேத்துன்ட்றா" என்றார். பிராண்டி குடித்து இருக்கிறார். வாசனையில் தெரிகிறது. எனக்கு கண்ணில் லேசாக எரிச்சல் கிளம்பியது. தூக்கம் வருவது போலிருந்தது. இப்போது தங்கை வந்து காப்பாற்றி விட்டாள். அம்மா அழைத்ததாக.
"சாப்டிறியாடா " " இல்லமா பசிக்கல" " சரி நீ தூங்கு நானும் பாப்பாவும் பார்வதி கூட இருக்கோம்" " ம்ம் சரிம்மா" என்று கிளம்பினேன்.
படுத்தது தான் நினைவிருக்கிறது விடியற்காலை ஐந்திலே ட்ரம்ஸ் அடித்து எழுப்பி விட்டனர். யாரோ உறவினர் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. சந்தோஷ் இறந்த கதையையும் தனது சேர்த்து வைத்த பணம் உதவாத கதையையும் கோமதியம்மாள் தனது தெலுங்கில் அச்சு பிசகாமல் சொல்லிக் கொண்டு இருக்கிறாள். கோமதியம்மாள் கஞ்சத்தனத்தின் அரசி.. ஒரு ரூபாய் கூட செலவு செய்ய மாட்டாள். பெரிய வீடு கட்டி விட்டாள். ஆனால் செல்போனுக்கு ரீச் சார்ஜ் செய்ய மாட்டாள். கடிகாரத்திற்கு பேட்டரி வாங்கி போடமாட்டாள். இப்படி நிறைய மாட்டாள். அதனால் தான் என்னவோ பெரிய வீட்டை கட்டி முடிக்க முடிந்ததோ என்னவோ. நானும் இப்படி ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது அம்மாவின் ஆசை. அவளது பொறுப்புகளை நான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அம்மாவை வேலைக்கு அனுப்பக்கூடாது. தங்கையை நன்றாக படிக்க வைத்து நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டும். இந்த அரசு வேலை வந்து விட்டால் எல்லாம் நினைத்தது போலாகிவிடும்.
எனதப்பா நான் சிறுவனாகவும் தங்கை மூன்று மாத சிசுவாகவும் வயிற்றில் இருந்த போது ஒரு விபத்தில் இறந்து விட்டார். அப்போதைய நேரம்தான் நான் பார்வதி அக்காவிடம் மிகவும் நெருக்கமாக பழக ஆரம்பித்த நாட்கள். அதுமட்டுமின்றி அப்போது அவர்களது நிலத்தை குத்தகைக்கு தந்து எங்களது வாழ்க்கை காப்பாற்றினர். மாடு நிலம் மட்டுமே வைத்து அம்மா என்னையும் தங்கையையும் வளர்த்து விட்டாள். சிறிய வயதிலேயே கணவனை இழந்த அம்மா இந்த ஊருக்கே ஒரு முன்மாதிரி. அம்மாவின் இன்னபிற உணர்ச்சிகளை எப்படி மடைமாற்றினார் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை. ஆனால் தினமும் அவரின் புகைப்பட ஃப்ரேமை தனது முந்தானையில் துடைத்து விட்டு மாட்டி வைப்பாள்.
எங்களது நிழல் எங்களது மேலே விழுந்துக்கொண்டு இருந்தது. ஒரு ஆட்டோ வந்தது. அதன் நிழலும் அதன் மேலேயே தான் விழுந்தது. பார்வதி அக்காவின் கணவர் ஆட்டோவில் இருந்து இறங்கினார். கூட்டம் ஆர்ப்பரித்து தனது உச்சத்தை அடைந்தது. கோமதியம்மாளுக்கு மாப்பிள்ளை என்றால் சற்று பயம். மரியாதையில் கூட சற்று பயம் கலந்திருக்கும். முதல் ஆளாக கோமதியம்மாள் தான் ஓடிச்சென்று ஓவென கட்டிப்பிடித்து அழுதாள். " ஈ பகவானு நன்னே தொடுக்குனு மா சந்துவோன்னே லோகத்துலே உட்சேசி இருக்கலாமே " என்றாள். அவர் கோபமாகத்தான் இருந்தார். சிறிது நேரம் கழித்து என்னை அழைத்தார். நான் எல்லா செலவுகளையும் எழுதி வைத்து இருந்த பேப்பரை கொடுத்தேன். மீதி பணத்தையும் கொடுத்தேன். " ஏன்டா உன்மேல நம்பிக்கை இல்லையா. எதுக்கு கணக்கு பேப்பர நீட்டுற" " இல்ல மாமா இப்ப இல்லைனாலும் நாளைக்கு கழிச்சு ஒதவும்" என்று சொன்னேன். அவரும் அதை வாங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். காசை மட்டும் எண்ணி பர்ஸில் வைத்து கொண்டார். பொறுப்பை முழுவதுமாக அவரிடம் ஒப்படைத்து விட்டேன். ஏதோ சிறிய நிம்மதி.
எல்லா சடங்குகளும் முடிந்தது.
சில மாதங்கள் கழித்து பார்வதி அக்காவுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. அப்போதும் அவளது கணவர் வெளிநாட்டிற்கு சென்றிருந்தார். எல்லோரும் புதிய குழந்தை பிறந்த பூரிப்பில் கிடந்தனர். ஆனால் அவர் பெரிதாக மகிழ்ச்சியை வெளிக்காட்டவில்லையென பார்வதி அக்கா புலம்பினாள்.
சில நாட்கள் கழித்து சிங்கப்பூர் மாமா தனது வாட்சப்பில் தனது மூத்த பிள்ளையின் படங்களை வரிசையாக ஸ்டேட்டஸில் வைத்திருந்தார். அதில் அவனது சிரிப்பு குழந்தைகளுக்கே உண்டான வழக்கமான சேஷ்டைகள் நிறைந்த பல புகைப்படங்கள் இருந்தது. கூடவே நானெடுத்த அவருடன் இருக்கும் புகைப்படமும் இருந்தது கடைசியாக.
நான் எனது வீட்டில் மாட்டியிருந்த எனது அப்பாவின் புகைப்படத்தை பார்த்தேன். லேசாக தூசி படர்ந்திருந்தது. எடுத்து கையால் துடைத்து மாட்டினேன். காலம் சீராக முன்னோக்கி செல்கிறது; அது யாருக்காகவும் நிற்பதில்லை; எப்போதுமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நதி. சந்தோஷக்கணங்களை மீட்டிப்பார்க்கும் இழவு வீட்டை எனக்கு நன்கு தெரியும். பழைய புன்னகை புரிந்த புகைப்படங்களுடன் அவர்கள் அதை திருப்பி திருப்பி பார்க்கும்போது காலமெனும் பயங்கர ராட்சசனின் சிரிப்பொலி என்னை சில்லிட வைக்கிறது.
( லக்ஷிமி சரவணக்குமார் தேர்ந்தெடுத்த முதல் கதை போட்டியில் பிரசுரிக்க தகுதியான கதை. பெருமையல்ல ஒரு தகவல் 😝 )
Great sir its interesting like Popular poet's stories in school books and u r extraordinary sir the way u take the reader to read the story completely and delivery of the theme of story is really awesome sir
ReplyDeleteThank u so much for ur kind words...
ReplyDelete