கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?
![]() |
ஒரு படைப்பின் படமாக்கல்முறை என்பது அதன் நோக்கத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டுமே அன்றி 'இப்படி எடுக்கலாம் அப்படி எடுக்கலாம்' என முன்தீர்மானித்துவிட்டு அதற்குள் கதையைக் கொண்டுவந்து அடைத்தால் அது துருத்திக் கொண்டுதான் தெரியும்!
சினிமா என்பது காட்சி ஊடகம்; திரை மொழி என இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் மூச்சுக்கு 300 முறை நேர்காணல்களில் கூறுகிறார். அவர் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால், அவர் செய்திருப்பது? அப்படியே தலைக்கீழானது.
ஒரேயொரு பிரேமில் காட்சிப்படுத்த வேண்டிய விஷயங்களை 5-20 நிமிடங்கள்வரை ஏன் காட்ட வேண்டும்?
எடிட்டிங் என்ற ஒன்று சினிமாவில் எதற்கு இருக்கிறது? இது மேடை நாடகமா? அல்லது ஆவணப் படமா? அதில்கூட இவ்வளவு நேரமிழப்பு இருக்காதுபோல!
20-30 நிமிடங்களில் எடுக்க வேண்டியதை 100 நிமிடங்கள் எடுத்திருப்பது எழுத்தில் போதிய சரக்கு இல்லை என்பதின் பிரதிபலிப்பே.
சினிமாவில் நீளமான காட்சிகளுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. முக்கியமான இடத்தில் வந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். அல்லது 1971 படம் மாதிரி ஒரு த்ரில்லர் / உயிர் பிழைப்பு போன்ற நேரங்களில் அதைப் பயன்படுத்தலாம்.
ஒருவர் சாமி கும்பிடுவதை 3.12 நிமிடம் ஏன் காட்ட வேண்டும்? கற்பூரம் எடுப்பதை ஊதுவத்தி கொழுத்துவதை 2 நொடிகளில் 2 பிரேம்களில் காட்டி விடலாமே?
ஆட்டோ ஸ்டார்ட் செய்வது , பைக்கில் பேட்ரோல் போடுவது, தலை வாறுவது, வண்டியில் செல்வது, மூத்திரம் அடிப்பது, மூத்திரம் அடிக்க நடப்பது இதையெல்லாம் 30-40 நிமிடங்களில் ஏன் காட்ட வேண்டும்?
அதன் நோக்கம் என்ன?
எது திரை மொழி? எது காட்சி ஊடகம்?
படைப்பாளியின் நோக்கம் ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக இருப்பது என்றால் அவற்றுக்கு தானே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
மேற் சொன்னவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் படம் பார்க்கிறவர்கள் என்ன முட்டாள்களா? இல்லை வேலை வெட்டி இல்லாதவர்களா? அல்லது இயக்குநரின் நோக்கம்தான் என்ன?
படத்தில் ஒரேயொரு ஆண் இருப்பது கேவலமான எழுத்து.
ஊரில் 'தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பார்கள். ஒரு பெண்ணை, மனைவியை ஒருத்தன் (அது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்) அடித்தால் ஒரு கணவன் என்ன செய்வான்?
சரி அவனுக்கு ஆண்மையில்லை அமைதியாக இருக்கிறான். ஊராமூட்டு ஆட்களை அடிக்கும்போது அவர்களும் ஏன் சும்மா இருக்க வேண்டும்?
அதிலும் ஆட்டோக்கார அண்ணன் அடிவாங்குவது, மாலையை பிய்த்தும் சூடு சொரணை இல்லாத மூணுசாமி கும்பிடும் ஒரு மதுரைக்கார ஆட்டோக்காரன் பி.எஸ்.வினோத்தின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு எனலாம்!
கூழாங்கல் படத்திலும் இந்த அடிதடி வரும். அதில் ஒரேயொரு ஆண் இருக்கமாட்டான். கூழாங்கல் ஒரு சுமாரான படமாக இருந்தாலும் அதில் இருந்த வலுவான எழுத்து இதில் இல்லை.
மனித உணர்வுகள், கதாபாத்திர வார்ப்புகளில் போதிய அளவுக்கு ஆழம் இல்லை.
கதாபாத்திரங்களுக்கு எவ்வளவு விவரணைகள் தருகிறோமோ அவ்வளவுக்கு படம் எதார்த்தமாக தெரியும்!
அமைதியான ஊரில் சண்டை இடுகிறார்கள் என்று ஓடும் நீரோடையை காட்டுகிறேன் என வினோத்தும் அவரது ரசிகர்களும் சொல்லுகிறார்கள். அதற்காக 10-20 நிமிட காட்சிகள் ஆவது வைக்கிறார்.
பசுமையான அழகான ஊர் இல்லை என்றால் சண்டை இடலாமா? படத்தின் நோக்கம் ஆணாதிக்கம் சாதிய ஒடுக்குமுறையா அல்லது ஊரைச் சுற்றிக் காட்டுவதா?
படத்தின் நோக்கம் இப்படியாக சிதறிக் கொண்டே செல்கிறது.
படத்தில் ஒரு காளை மாடு வரும். அனைவரும் பயப்படுவார்கள். சிறுமி அழைத்து செல்வாள். நல்ல காட்சி. ஆண்கள் ஒன்றும் புடுங்க முடியாததன் அபத்தம்.
இதற்கு விளக்கம் கொடுத்து - அந்தக் காளை அவளின் காதலன். அவன் கெத்தானவன் என்கிறார்கள். இந்த மட்டிக் கூட்டத்தை நாயகியே பார்த்துக் கொள்கிறேன் என்று குறியீடு வைக்கிறார்கள்.
பின்பு இன்னொரு காட்சியில் அவள் இறந்துவிட்டு நடமாடும் காட்சி. அதுதான் கிளைமேக்ஸ் என்று இயக்குநரே சொல்லுகிறார்.
அப்போது அந்தக் கெத்தான காதலன் என்ன புடுங்கிக் கொண்டு இருக்கிறான்? அவனது செயல்பாடுகள் என்ன?
இது நாயகியின் பார்வையில் மட்டுமோ அல்லது யாருடைய குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் பார்வை வழியாக மட்டுமேயும் கதை விரிவடையவில்லை. அதனால் மற்றதையும் காட்டியே ஆக வேண்டும். அதுதான் கதை சொல்லியின் கடமை.
தாய் மாயன்களின் அதிகாரம், அதன் பொருளாதார சுரண்டல், பெண்களை கவரமுடியாமை என்பவை மட்டுமே படத்தில் சரியாக வந்திருக்கின்றன. ஆனால், அதற்காக இவ்வளவு சுற்றி வளைத்து பார்வையாளர்களை மட்டமாக கருதி தியேட்டரில் ரிலீஸ் செய்தது கொடூரமான முடிவு.
அந்தச் சிறுவனும் அழுது அவள் சிரிக்கவே அவனும் சிரிப்பான். இதுமாதிரியான கணத்தைதான் வினோத் உருவாக்க வேண்டும். அங்குதான் உண்மையான கலைப்படைப்பு, அழகியல், காட்சி மொழிகள் என அனைத்து இருக்கிறது.
டிரைலரை பாராட்டி இருந்தேன். அதில் இருக்கும் வேகம் படத்தில் இல்லை. அது ஒரு வகையில் மோசடி அல்லது மக்களை கவர படக்குழு செய்த மோசமான ஒரு யுக்தி.
படம் இப்படித்தான் இருக்கும் என்று டிரைலரிலேயே சொல்லியிருந்தால் யாரும் போயிருக்க மாட்டார்கள். நான் பார்த்த திரையரங்குகளில் பலர் பாதியிலேயே கிளம்பிவிட்டனர்.
திரையரங்குக்கு வந்தாலே அது கமர்ஷியல் படம்தான். அதைவிட்டுவிட்டு கலை என்ற பெயரில் ஜேப்படி செய்யும் இவர்களை தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் என்பதும் தமிழின் உன்னத படைப்பு என்பதும் இத்தனை நாளாக நல்ல படங்களை எடுத்தவர்கள் மீது காரி உமிழ்வதற்கு சமமாகும் இல்லையா?
அழகியல், குறியீடு என்று தேவையில்லாத காட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கும் போலியான அறிவுஜீவுகள் தமிழ்ப் படங்களை உலக அளவில் கொண்டு செல்லும்போது மிகவும் கவனம் தேவை.
இல்லாவிட்டால் வெளிநாட்டவருக்கு, "ஓ! இவைகள்தான் தமிழ்ப்படமா?" என்ற எகத்தாளம் ஒட்டுமொத்தமாக தமிழ்ப் படங்களும் தமிழனுக்கும் அவப்பெயரை உண்டாக்கும்!
காட்சி மொழி என்று ஜல்லியடிக்காமல் கதையில் கவனம் செலுத்தினால் வினோத் தப்பிக்கலாம். மக்கள் ஒருமுறைதான் மன்னிப்பார்கள்!
Comments
Post a Comment